எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததால், ரிசப்ஷன் மேடை இரண்டு முறை உடைந்துவிட்டதாக நடிகர் ரோபோ ஷங்கரின் மருமகன் கார்த்திக் கூறி இருக்கிறார். இந்த மேடையில் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கரும் மேடையிலேயே இரண்டு முறை மயங்கி விழுந்திருக்கிறார்.
நடிகர் ரோபோ ஷங்கர் மகள், ‘பிகில்’ படப்புகழ் இந்திரஜா ஷங்கர் மற்றும் கார்த்திக் திருமணம் கடந்த மார்ச் மாதம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. ரோபோ ஷங்கர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதால் அவர் தலைமையில் மகள் திருமண வரவேற்பு சென்னையில் நடக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு அவருக்கு நேரில் அழைப்பு விடுத்திருந்தார். ரோபோ ஷங்கரின் வேண்டுகோளை ஏற்று தேர்தல் பிஸியிலும் கமல்ஹாசன் கடந்த ஞாயிறன்று நேரில் வந்து ரிசப்ஷனில் கலந்து கொண்டார்.
கமல்ஹாசன் மட்டுமல்லாது விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண தேதி முடிவானதுமே இந்திரஜா- கார்த்திக் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி தங்கள் திருமணம் குறித்தான வீடியோக்கள், ஷாப்பிங், மேக்கப் எனப் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். அப்படி தங்கள் ரிசப்ஷன் குறித்து கார்த்திக் பேசும்போது, “நாங்கள் 3,000 பேர் வருவாங்க என்று தான் எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக அதாவது 9,000 பேர் ரிசப்ஷனுக்கு வந்துவிட்டார்கள்.
கட்டுக்கடங்காத இந்தக் கூட்டத்தால், திருமண வரவேற்பு ஸ்டேஜ் 2 முறை உடைந்து விட்டது. இருந்தாலும் உடன் இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இரண்டு முறையும் ஸ்டேஜை உடனடியாக சரி செய்து கொடுத்தனர். அதேபோல, மண்டபத்தில் என்னதான் ஏசி இருந்தாலும் சோர்வு காரணமாக இந்திரஜாவும் இரண்டு முறை மயக்கமாகிட்டாங்க” எனச் சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
ஊரே பார்த்து வியக்கும் அளவுக்கு ரோபோ ஷங்கர் தனது செல்ல மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். அதில் திருஷ்டியாக இந்த நிகழ்வு இருக்கும் எனப் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!