டெல்லியில் இயக்குநர் அமீரிடம் 11 மணி நேரம் தீவிர விசாரணை... திடீர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் பரபரப்பு!


டெல்லியில் இயக்குநர் அமீர்

2, 000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீரிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் 11 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், விசாரணை முடிந்து வந்து கொண்டிருக்கிறேன், ஊடக நண்பர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று இயக்குநர் அமீர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

ஜாபர் சாதிக்

2,000 கோடி‌ ரூபாய் மதிப்பிலான 3,500 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக முன்னாள் நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை கடந்த 9-ம் தேதி டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.‌ அவரிடம் நடத்திய விசாரணையில் ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தி சம்பாதித்த பணத்தைக் கட்டுமான நிறுவனம், சினிமா தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.‌

ஜாபர் சாதிக்குடன் அமீர்

அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக் தயாரிக்கும் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற திரைப்படத்திற்காக இயக்குநர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி அதற்கான முன்பணமாக 28 லட்சம் ரூபாயை கொடுத்தது தெரிய வந்தது. அத்துடன் இந்த படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்த நிலையில் தற்போது மீதமுள்ள படம் எடுக்க முடியாமல் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும் கடந்த 2014 முதல் ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் இருவரும் சேர்ந்து லீ கேப் என்கிற உணவகத்தை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது. ஆனால், இயக்குநர் அமீர் தனக்கும் ஜாபர் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீர் உட்பட மூன்று நபர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் நேற்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

குறிப்பாக ஜாபர் சாதிக் உடனான நட்பு மற்றும் அவருடன் சேர்ந்து தொழில் செய்து வருவது குறித்தும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. மேலும் இயக்குநர் அமீரின் வாக்குமூலத்தை எழுத்து பூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

சுமார் 11 மணி நேர விசாரணைக்கு பின்னர் அமீரை அதிகாரிகள் விடுவித்தை அடுத்து அவர் சென்னை திரும்பியுள்ளார். இதற்கிடையே இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்ஸில், "அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை என்னை யாரும் அழைக்க வேண்டாம் "என பதிவிட்டுள்ளார்.

x