[X] Close

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்; ஹேப்பி பர்த் டே கீர்த்தி!


keerthi-suresh-birthday

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 11:34 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சிலரை பார்த்தவுடனே பிடித்துப் போகும். அவர்களின் முகம் அப்படியொரு பாந்தமாக இருக்கும். கண்கள் எந்நேரமும் சிரித்துக்கொண்டிருக்கும். குழந்தைமையுடன் இருக்கிற அந்த முகத்தைப் பார்த்தாலே யாருக்கும் திட்டத்தோன்றாது. அப்படியான முகங்கள் கொண்டவர்கள் வெகு குறைவு. ஆனால் அந்த முகத்துக்காரர்களை எல்லோருக்கும் பிடிக்கும் என்பது மட்டும் உண்மை.கீர்த்திசுரேஷின் முகமும் முகவரியும் அப்படித்தான்!

கடவுளின் தேசமான கேரளத்தைச் சேர்ந்தவர் கீர்த்திசுரேஷ். அம்மா மேனகாவும் நடிகைதான். மலையாளத்தில் மிகச்சிறந்த படங்களில் நடித்திருக்கிறார் இவர். ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில், ஜோடியாக நடித்திருந்தார். விஜயகாந்த் முதலான நடிகர்களுடன் நடித்து வலம் வந்தார். அவரின் மகளான கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.

படித்துக்கொண்டே நடித்துக்கொண்டிருந்தார். பிறகு நடிப்பையே படிப்பாக்கிக்கொண்டு முழுவீச்சில் வலம் வரத் தொடங்கினார். இயக்குநர் விஜய்யின் இயக்கத்தில் இது என்ன மாயம், பிரபு சாலமனின் தொடரி, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் என்று வாகனத்தின் கியர் போல், ஒவ்வொரு கியராகப் போட்டு, கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்தார்.

விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்தார். அவருடன் அடுத்து நடிக்கும் சர்கார் படம், தீபாவளிக்கு வர இருக்கிறது. நாளை அக்டோபர் 18ம் தேதி, விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ள சண்டக்கோழி 2 ரிலீசாகிறது.

சண்டக்கோழி 1ல் மீரா ஜாஸ்மின். இப்போது அவருக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ். ‘இது எனக்கு நல்ல வாய்ப்பு’ என்று மகிழ்ந்து சொல்லும் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்வில் நிகழ்ந்ததுதான் அவரின் ஆகச்சிறந்த வாழ்நாள் பரிசு.

தமிழிலும் தெலுங்கிலும் கோலோச்சிய நடிகையர் திலகம் சாவித்திரியின் நடிப்பும், அவரின் முகபாவனைகளும், உருக்கமான குரல்குழைவும் எல்லோருக்கும் அத்துபடி. நிஜத்தில் அவரின் சோகமான முடிவு, ஆறாத்துயரம் கொண்டது.

அந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக படைக்கப்பட்டது. அதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்ததுதான், இன்னும் ஐம்பது வருடங்களானாலும் சினிமா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

கூடு விட்டுக் கூடு பாய்வது என்றொரு வாசகம் உண்டு. அது என்ன என்று கேட்போருக்கும் அதை அறிந்தவர்களுக்குமான உதாரணம்... கீர்த்திசுரேஷ்.

நடிகையர் திலகம் எனும் படத்தில், கீர்த்திசுரேஷ் காணாமல் போய், சட்டென்று திரையில் அவரே சாவித்திரியாகவே கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பார். சாவித்திரியைப் போலவே இரண்டு தோள்களையும் தூக்கிக்கொண்டு நிற்பதும் லேசாக குதித்து நடப்பதும் என அப்படியே மாறியிருந்து, காட்சிக்குக் காட்சி கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டே இருந்தார்.

இந்தக் கால ரசிகர்களுக்கு அந்தக் கால சாவித்திரியை அப்படியே கண் முன் கண்டு வந்து நிறுத்தியதுதான் கீர்த்தி சுரேஷின் கீர்த்தி. இதையடுத்து மக்களின் மனசுக்கு இன்னும் நெருக்கமாகி வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அம்மாவை புகழ்பெற்ற நடிகையாகிவிட்டார் இப்போது.

‘நான் சின்னப்பொண்ணா இருக்கும்போது, எங்க அம்மாவுக்கு ஒரு படத்துக்கு விருது கிடைக்கவேண்டி இருந்துச்சு. ஆனா ஜஸ்ட் மிஸ்... தேசிய விருது கிடைக்கும்னு எதிர்பார்ப்போட இருந்த அம்மா, அழ ஆரம்பிச்சிட்டாங்க. அதை என்னால மறக்கவே முடியாது’ என்று சொல்லும் கீர்த்தி சுரேஷ், அந்த சின்னவயதில் அம்மாவிடம், ‘கவலைப்படாதேம்மா, அந்த விருதை நான் வாங்கறேன். உனக்குக் கொடுக்கறேன்’ என்று சொல்லி ஆறுதல் சொல்லியிருக்கிறார்.

நடிகையர் திலகம்... அந்த விருதை பெற்றுக் கொடுக்கும். கீர்த்தி சுரேஷ் இன்னும் இன்னும் உயரங்கள் தொட்டு, சாதனைகள் படைத்து, விருதுகளைப் பெறட்டும்.

17.10.18 இன்று கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள். ஹேப்பி பர்த் டே கீர்த்தி.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close