[X] Close

லீலாமணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு; ’ஒரு ரூபாய்’ நஷ்ட ஈடு கேக்கப் போறேன்! - இயக்குநர் சுசிகணேசன் விளக்கம்


susiganesan-leelamanimegalai

இயக்குநர் சுசி கணேசன் - லீலா மணிமேகலை

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 10:54 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

லீலா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போகிறேன். ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடப்போகிறேன் என்று இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்தார்.

மீ டூ என்கிற பெயரில், பிரபலங்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், இயக்குநர் சுசி கணேசன் மீது லீலா மணிமேகலை என்பவர், பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கங்கள் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி என்னுடைய விரும்புகிறேன், ஃபைவ் ஸ்டார் படங்களுக்கு தமிழக அரசு விருது அறிவித்தது. இதன் பிறகு லீலா மணிமேகலை என்பவர் வெளிநாட்டுப் பத்திரிகைக்காக என்னிடம் பேட்டி கேட்டு வந்தார். நானும் பேட்டி கொடுத்தேன். ஆனால் விலையுயர்ந்த என்னுடைய காரில் வந்ததாகவும் நான் தவறாக நடந்துகொண்டதாகவும் சென்னையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக அவரை இறக்கிவிடாமல் காரில் சுற்றிக்கொண்டிருந்ததாகவும் அவர் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் சொல்லியிருக்கிறார்.

இன்று வரை கூட என்னிடம் விலையுயர்ந்த கார் இல்லை. ஆடம்பரக்கார் வைத்துக்கொள்ளும் அளவுக்கு நான் வசதியானவனும் இல்லை. என்னுடைய உதவியாளர்தான் எனக்கு டிரைவர். எப்போதும் என்னுடனே இருப்பார்.

இந்தச் சம்பவமெல்லாம் அக்டோபர் மாதம் நடந்ததாகச் சொல்லுகிறார். இங்கே ஒருவிஷயம்... நவம்பர், டிசம்பர் இரண்டு மாதங்கள் கழித்து ஜனவரி மாதத்தில் என்னுடைய வாக்கப்பட்ட பூமி புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரே லீலா மணிமேகலைதான். நான் அப்படியெல்லாம் பாலியல் அத்துமீறல் செய்திருந்தால், அவர் அந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்க வந்திருப்பார்? அவர் அப்படி கத்தியைக் காட்டி என்னை மிரட்டியிருந்தால், நான் அவரை எப்படி விழாவை தொகுத்துத் தரச்சொல்லிக் கேட்டிருப்பேன்?

அந்த விழாவில் எடுத்த புகைப்படங்கள்தான் எனக்கு இருக்கும் ஆதாரம். அந்த ஆதாரங்களைக் கொண்டு லீலா மணிமேகலை மீது கோர்ட்டில் கேஸ் போடப்போகிறேன்.

கடந்த இரண்டுநாட்களாக, என்னை தெருவில் நிறுத்தி தொங்கவிட்டிருக்கிறார் அவர். இதுவரை கட்டிக்காத்துவந்த, கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து வைத்திருந்த பேரையும் புகழையும் மரியாதையையும் மொத்தமாக சின்னாபின்னப்படுத்திவிட்டார்.

லீலா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு போடப்போகிறேன். ஒருரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப் போகிறேன்.

இவ்வாறு சுசி கணேசன் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close