[X] Close

திரையுலகில் எல்லாமே பாய்ஸ் கிளப்தான்: லீனா மணிமேகலை கடும் சாடல்


leena-press-meet

  • kamadenu
  • Posted: 16 Oct, 2018 21:07 pm
  • அ+ அ-

இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கும் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, “#MeToo மூவ்மென்ட் கடந்த 3 வருடங்களாக உலகம் முழுவதும் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அது, தாமதமாக இந்தியாவுக்கு வந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக பாலிவுட்டில் இந்த விஷயம் பேசப்பட்டு, தற்போது தென்னிந்தியாவிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. #MeToo மூவ்மென்ட் என்றால் என்ன என்ற அடிப்படைப் புரிதலே இங்கு குறைவாக இருக்கிறது. அப்போது நடந்ததை அப்போது சொல்லாமல் ஏன் இப்போது சொல்கிறீர்கள் என்ற அடிப்படை விவாதங்கள்தான் தமிழ்ச் சூழலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பணியிடங்களில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, பாலியல் ரீதியாகப் பெண்களுக்குத் தொல்லைகள் கொடுக்கும் விஷயத்தைக் கண்டித்துதான் #MeToo மூவ்மென்ட் ஆரம்பித்துள்ளது. தங்களுக்கு நடைபெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அல்லது அத்துமீறல்களைச் சொல்வதற்கான சூழல் தற்போது வரைக்கும் வெளிநாடுகளில் கூட இல்லை எனும்போது, இந்தியாவில், குறிப்பாக தமிழ்ச் சூழலில் இருக்கிறதா என்ற கேள்வியை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு பெண் தானாக முன்வந்து தன்னைப் பற்றி தவறாகச் சொல்ல மாட்டார்கள். இது ஒன்றும் பெருமைப்படக்கூடிய விஷயம் கிடையாது. உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் கேலிக்குள்ளாக்குகிற விஷயம் இது. அந்த அனுபவத்தைச் சொல்லித் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொள்கிற அவசியம் எந்தப் பெண்ணுக்கும் இல்லை. ஆனால், ஏன் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி மட்டும் எல்லாப் பெண்களுக்கும் இருக்கிறது.

இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசும்போது, என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்துதான் ஒரு பெண் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறாள். ஏனென்றால், அந்தக் குரல் இன்னும் வலுப்பெற வேண்டும். நிறைய பெண்கள் தைரியமாக தங்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும். பணியிடங்களில் சம உரிமை பேணப்பட வேண்டும். அவளையும் சக மனுஷியாக சுயமரியாதையுடன் நடத்த வேண்டும். இந்த விஷயங்களை முன்னிறுத்திதான் #MeToo மூவ்மென்ட் நடந்து கொண்டிருக்கிறது.

சட்ட ரீதியாக இதை நிரூபித்து, சம்பந்தப்பட்டவர்களை ஜெயிலுக்கு அனுப்புவது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், ஆதாரங்கள் இருந்தே பாலியல் தொடர்பான வழக்குகளில் இங்கு எவ்வளவு பேருக்கு நீதி கிடைக்கிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும். இப்படி இருந்தாலும் ஒரு பெண் தனக்கு நடந்த விஷயத்தை வெளியில் சொல்கிறாள் என்றால், தனக்கு நடந்தது இன்னொரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது என்பதால்தான். ஒரு பெண் தன்னுடைய கனவுகளை ஒரு ஆணின் துஷ்பிரயோகத்துக்காகப் பலிகொடுக்க வேண்டும் என ஏன் இந்த சமூகம் நினைக்கிறது? என்பதைத்தான் இந்த #MeToo மூவ்மென்ட் கேள்வியாக வைக்கிறது.

மலையாள நடிகை ஒருவருக்கு காரில் நடைபெற்ற நிகழ்வைப் பற்றிக் கடந்த வருடம் படிக்கும்போது, எனக்கு நிகழ்ந்ததும் நினைவுக்கு வந்தது. அதனால், கடந்த வருடம் என்னுடைய ஃபேஸ்புக்கில் அந்தப் பதிவைப் போட்டேன். அப்போது கூட அது யார் என்று நான் சொல்லவில்லை. நிறைய பத்திரிகையாளர் நண்பர்கள் அந்தப் பதிவுக்குக் கீழேவந்து, ‘அது யார்?’ என்று கேட்டனர். அப்போதும் நான் சொல்லவில்லை. அதைச் சொல்ல எனக்குத் தைரியம் இல்லை என்றுகூட சொல்லலாம்.

#MeToo மூவ்மென்ட் மூலம் அது யார் என்று சொல்லும் தைரியம் இன்று வந்திருக்கிறது. அதை அவர் மறுக்கிறார் என்றால், மறுக்கட்டும். சக இயக்குநரை அவதூறு பேசுவதை விட்டுவிட்டு, கொஞ்சம் மனசாட்சியுடன் பேசுங்கள். மனசாட்சி என்ன சொல்கிறதோ, அதைக் கேளுங்கள். ‘நீங்க ஏன் கார்ல ஏறுனீங்க?’னு கேட்குறாங்க. இங்கு வரும்போது கூட ‘உபர்’ல தான் வந்தேன். யாரென்றே தெரியாத டிரைவருடன் தான் ஏறிப் போகிறோம். ‘என் காரில் ஏறினால் நான் அப்படித்தான் பண்ணுவேன்?’ என்று சொல்ல வருகிறீர்களா? உன்னை நம்பி காரில் ஏறினேன். ஆனால், நீ அப்படி நடந்து கொண்டாய். நம்பிக்கையைச் சிதைத்து விட்டாய். உங்கள் மறுப்பைப் படிக்கும்போது, உங்கள் மனதுக்குள் இருக்கிற ஆண் என்ற அதிகாரம்தான் வெளிப்படுகிறது. அதைப் படிக்கும்போது, ‘இது எல்லாவற்றையும் செய்யக்கூடியவர் தான் நீங்கள்’ என்றுதான் எல்லாருக்கும் தோன்றுகிறது.

மலையாள சினிமாவை எடுத்துக்கொண்டால், பாதிக்கப்பட்ட ஒரு நடிகைக்காக எல்லா நடிகர் - நடிகைகளும் ஒன்று கூடுகிறார்கள். அதற்கான நீதி கிடைக்கும்வரை அவர்கள் பின்வாங்குவதில்லை. இதனால் தனக்குப் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுமோ என யாரும் நினைப்பதில்லை. அப்படியொரு சூழ்நிலை தமிழ் சினிமாவில் வந்தால், சுசி கணேசன் மாதிரியான ஆட்கள் இப்படித் துள்ள வேண்டிய அவசியமில்லை.

இங்கிருக்கும் இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் எல்லாமே பாய்ஸ் கிளப் தான். இவர்களின் படைப்புகளில் தொடர்ந்து பெண்களை சிறுமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். முதலில் உங்கள் படைப்புகளில் பெண்ணைச் சமமாக நடத்தியபிறகு, பிறகு பெண்ணுக்கான நீதி குறித்துக் குரல் கொடுங்கள். வியாபாரத்திற்காகப் பெண்ணை ஒரு படத்தில் எப்படி வேண்டுமானாலும் சித்தரிப்பேன் என்று கொள்கை வைத்திருப்பவர்கள், எந்த விதத்திலும் பெண்ணுக்கான நீதியைப் பெற்றுத்தர மாட்டார்கள்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close