[X] Close

ராணி மீது நடிகர்சங்கத்தில் புகார்; குடும்பமே மன உளைச்சலில் இருக்கிறது! – சண்முகராஜன் வேதனை


shanmugarajan-rani

நடிகை ராணி - நடிகர் சண்முகராஜன்

  • kamadenu
  • Posted: 16 Oct, 2018 20:39 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

ராணிக்கும் எனக்கும் சண்டை நடந்தது உண்மைதான். ஆனால் பாலியல் கொடுமையும் செய்யவில்லை. அவரிடம் தவறாகவும் நடக்கவில்லை. நடிகர்சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் என்று நடிகர் சண்முகராஜன் தெரிவித்தார்.

நாடகத்துறையில் நடித்துக்கொண்டிருந்தவர் சண்முகராஜன். கமலின் விருமாண்டி படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். ரஜினியின் சிவாஜி, விஷாலின் சண்டக்கோழி, ஷங்கரின் அந்நியன் முதலான பல படங்களில் நடித்திருக்கிறார்.

அஜித்தின் காதல் கோட்டை படத்தில் வெள்ளரிக்கா பாடல், விக்ரமின் ஜெமினி படத்தில் ஓ போடு பாடல் என நடித்தவர் ராணி. ஒருகாலத்தில் ராமராஜனுடன் ஜோடியாக ஒரு படத்தில் நாயகியாக நடித்தவர்.

சண்முகராஜனும் ராணியும் நந்தினி சீரியலில் கணவன் மனைவியாக நடித்துவருகிறார்கள். கதையின்படி, சண்முகராஜனை அடிப்பது போல் நடிக்கவேண்டும். ஆனால் உண்மையாகவே அடித்துவிட்டார் என சொல்லப்படுகிறது. மேலும் ராணியின் கணவர், படப்பிடிப்புக்கு வந்திருந்தபோது, சண்முகராஜனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் என்கிறார் சண்முகராஜன். பிறகு இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, பிரச்சினை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.

இந்த நிலையில், மீ டூ விவகாரம் இந்தியா முழுவதும் பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், மீண்டும் ஸ்டேஷனுக்குச் சென்று, சண்முகராஜன் மீது பாலியல் கொடுமை செய்தார் என புகார் அளித்தார் ராணி. இந்த நிலையில், நடிகர்சங்கத்துக்கு வந்து ராணியின் குற்றச்சாட்டுகள் குறித்து புகார் அளித்திருக்கிறார் சண்முகராஜன்.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக நடிப்புத் துறையில் இருக்கிறேன். கமல் சார்தான் என்னை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். நானுண்டு என் நடிப்புப்பணி உண்டு என்று இருப்பவன் நான். இதுவரை என்னை வைத்து படமெடுத்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

ஆனால் நடிகை ராணி, என் மீது அபாண்டமாக பாலியல் குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார். எனக்கும் அவருக்கும் சண்டை நடந்தது உண்மைதான். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, ராணி இப்போது இப்படியொரு புகார் அளித்திருக்கிறார்.

நானும் என் குடும்பத்தாரும் உறவினர்களும் நண்பர்களும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். என் இத்தனை வருட வாழ்க்கையிலும் சரி, திரையுலக வாழ்க்கையிலும் சரி, இப்படியொரு கெட்டபெயரை நான் வாங்கியதே இல்லை.

அதனால்தான் நடிகர்சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். தலைவர் நாசரிடம் முழு விவரங்களையும் சொல்லிவிட்டேன். விஷால் சாருக்கும் இந்தத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒருவேளை, நான் குற்றவாளியென்றால் எனக்கு ரெட்கார்டு போடட்டும். இனிமேல் நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், ராணி அபாண்டமாகப் புகார் கூறியிருப்பது உண்மையென்று தெரிந்தால், அவருக்கு ரெட்கார்டு கொடுக்கட்டும். இனி அவர் நடிக்கவே கூடாது.

இவ்வாறு சண்முகராஜன் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close