மகளின் காதலை உறுதி செய்த போனி கபூர்... ரசிகர்கள் வாழ்த்து!


மகள் ஜான்வி கபூரின் காதலை உறுதி செய்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் ஷிகர் பஹாரியா போன்ற ஒருவரை தங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.

நடிகை ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் ஆங்கில புத்தாண்டு, பிறந்தநாள், விசேஷ நாட்களில் காதலர் ஷிகர் பஹாரியாவுடன் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புகைப்படங்களை அதிகம் பார்க்க முடிந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன்தான் இந்த ஷிகர் பஹாரியா.

கடந்த சில வருடங்களாகவே இருவரும் டேட் செய்வதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்வி, ”அப்பா, குஷிக்குப் பிறகு ஷிகர்தான்” என மறைமுகமாகத் தனது காதலை சொன்னார். இப்போது அவரது அப்பா போனி கபூர் வட இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் தனது மகளின் காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளார்.

காதலருடன் ஜான்வி கபூர்

அந்தப் பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, “என் இரு மகள்களைப் போலவே ஷிகரையும் நேசிக்கிறேன். ஜான்விக்கு முன்பிருந்தே அவரை எனக்குத் தெரியும். அவரைச் சுற்றி யார் இருந்தாலும் பாசிட்டிவாகவும் நல்ல நட்புடனும் இருப்பார். நிச்சயம் இவர்களது காதலில் எந்த குறையும் இருக்காது என உறுதியாக சொல்வேன். அவரைப் போன்ற ஒருவர் எங்கள் குடும்பத்திற்குள் வருவதை ஆசீர்வாதமாகவே பார்க்கிறேன்” என உருகியுள்ளார் போனி கபூர்.

சீக்கிரமே ஜான்வி- ஷிகர் திருமணத்தை செய்து வையுங்கள் என பாலிவுட்டின் இந்த புதிய காதல் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். ஜான்வி இப்போது தெலுங்கில் ‘தேவரா’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x