[X] Close

ஆர்மோனியத்தைத் தொட்டா, கைலயே அடிப்பார் அண்ணன்! – இளையராஜா நெகிழ்ச்சி


ilayaraaja

இசைஞானி இளையராஜா

  • kamadenu
  • Posted: 16 Oct, 2018 18:32 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

ஆர்மோனியத்தைத் தொட்டா, என் கைலயே அடிப்பார் அண்ணன். ஆனா அதையெல்லாம் தாண்டித்தான் இசையைக் கத்துக்கிட்டேன் என்று இளையராஜா தெரிவித்தார்.

இளையராஜாவுக்கு 75 வயது. இந்த 75வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் கலந்துகொண்டு இளையராஜா தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

எங்கள் அண்ணன் பாவலர் வரதராசன் அவர்களுடன் சிறுவயதில் கம்யூனிஸ்ட் பிரச்சாரத்துக்குச் சென்று பாடுவோம். வீட்டில் இருக்கும் போது, ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டே இருப்பேன்.

ஆர்மோனியத்தைத் தொட்டால் அண்ணனுக்குக் கோபம் வந்துவிடும். பிரம்பை எடுத்துக்கொள்வார். கையை நீட்டுடா என்பார். நான் நீட்டுவேன். உள்ளங்கையைக் காட்டுவேன். திருப்புடான்னு சொல்லுவார். பின்னங்கையைக் காட்டுவேன். பொளேர்பொளேர்னு அடிப்பார்.

ஆனாலும் அப்படி அடியெல்லாம் வாங்கினாலும் ஆர்மோனியத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துக்கொண்டே இருந்தேன். அப்போது ஒருநாள், அண்ணனுக்கும் அவர் கச்சேரியில் ஆர்மோனியம் வாசிப்பவருக்கும் ஏதோ சண்டை. அதனால் அவர் வரவில்லை. ஆனால் கச்சேரிக்குப் போகவேண்டும். ஆர்மோனியம் வாசிக்க ஆள்வேண்டும்.

அந்தச் சமயத்தில்தான், அண்ணனிடம், ‘தம்பியைக் கூட்டிட்டுப் போப்பா’ன்னு அம்மா சொன்னாங்க. அண்ணனும் அரைமனசோட கூட்டிட்டுப் போனார்.

டிராயர் போட்டுக்கிட்டு, சின்னப்பையன் நான் ஆர்மோனியம் வாசிக்க, மொத்தக் கூட்டமும் அப்படிக் கைத்தட்டுச்சு. இத்தனைக்கும் தப்பும்தவறுமாத்தான் வாசிச்சேன். அப்புறமா நினைச்சிக்கிட்டேன்… தப்பும்தவறுமா வாசிக்கும் போதே இப்படிக் கைத்தட்டுறாங்களே… நல்லா வாசிச்சா எப்படியெல்லாம் கைத்தட்டி, பாராட்டுவாங்கன்னு யோசிச்சேன். இன்னும் ஆர்வமா கத்துக்கிட்டேன்.

இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close