பிறந்த நாளே இறந்த நாளாக மாறிய சோகம்... விருப்பப்படியே கண் தானம் செய்த டேனியல் பாலாஜி!


நடிகர் டேனியல் பாலாஜி

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ள நிலையில், அவர் கண் தானம் செய்துள்ள செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக புகழ் பெற்றவர் நடிகர் டேனியல் பாலாஜி (48). 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'பொல்லாதவன்' எனப் பல படங்களில் நடித்துள்ளார். திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு நேற்று நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். நேற்று நடிகர் டேனியல் பாலாஜியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளிலேயே உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் இன்னும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி கேள்விபட்டு புரோமேட் மருத்துவமனையில் இயக்குநர்கள் கௌதம் மேனன், அமீர், வெற்றிமாறன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் போன்ற திரை பிரபலங்களும், உறவினர்களும் குவிந்தனர்.

இளம் வயதில் டேனியல் பாலாஜி...

மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் அவரது விருப்பப்படியே தானம் செய்யப்பட்டு, அவரது உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு தகனம் செய்யபட உள்ளது.

டேனியல் பாலாஜி அம்மாவும், மறைந்த நடிகர் முரளி அம்மாவும் உடன்பிறந்த சகோதரிகள். நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் முரளி, லைலா நடித்த 'காமராசு' படத்தில் உதவி இயக்குநராக முதன்முதலில் பணிபுரிந்து, திரையுலகில் நுழைந்தார். தன் அம்மாவின் ஆசைக்காக டேனியல் பாலாஜி சென்னை ஆவடியில் ஶ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி என்ற அம்மன் ஆலயம் ஒன்றை கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x