’தி கோட் லைஃப்’ படத்திற்காக நடிகர் சூர்யா பிருத்விராஜூக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் படம் போல வாழ்வில் ஒருமுறைதான் வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள படம் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’. மலையாளத்தில் விற்பனையில் பல லட்சம் பிரதிகளைத் தாண்டிய ‘ஆடுஜீவிதம்’ புத்தகத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. பிளெஸ்ஸி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வருகிற 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா சிலாகித்துள்ளார்.
இந்த டிரெய்லர் லிங்கை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‘உயிர் பிழைக்கும் போராட்டம் கடுமையானது. இந்தக் கதையைச் சொல்ல கிட்டத்தட்ட 14 ஆண்டுகால உழைப்பை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். இதை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படமாக சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் அமையும். இயக்குநர் பிளெஸ்ஸி, பிருத்விராஜ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ எனக் கூறியுள்ளார்.
தனது குடும்ப சூழ்நிலைக்காக பாலைவனத்தில் வேலை செய்வதற்காக சென்ற கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவரின் உண்மைக் கதைதான் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’. இந்தக் கதையை படமாக உருவாக்க, இயக்குநர் பிளெஸ்ஸி 14 ஆண்டுகள் காத்திருந்து சாத்தியப்படுத்தியுள்ளார்.
பிருத்விராஜூம் படத்திற்காக உடல் எடை கூட்டி, குறைத்துள்ளார். இந்த உழைப்பைதான் நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!