HBD LR Eswari: இசையுலகின் பட்டத்துராணிக்கு பிறந்தநாள்!


எல்.ஆர்.ஈஸ்வரி...

தமிழ் இசையுலகின் முடிசூடா பட்டத்துராணி எல்.ஆர். ஈஸ்வரிக்கு இன்று 83 வது பிறந்தநாள். காலம் கடந்தும் நெஞ்சில் நிற்கும் கிளாசிக் ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரரான ஈஸ்வரி குறித்து சில சுவாரஸ்யத் தகவல்களைப் பார்க்கலாம்.

எல்.ஆர்.ஈஸ்வரி...

’வாராயோ தோழி’ என எல்.ஆர். ஈஸ்வரி பாடினால் மகிழ்ச்சி பொங்கும். அதே, ‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’, ‘கற்பூரநாயகியே’ எனக் குரலெடுத்துப் பாடினால் பக்தியில் உடல் சிலிர்க்கும். அதுவே, ‘கலாசலா கலாசலா’ எனப் பாடினால் மூன்று தலைமுறையும் எழுந்து ஆடும். அப்படியான குரல் வளத்திற்கு சொந்தக்காரர் ஈஸ்வரி. வயதால் முதிர்ந்திருந்தாலும் குரலால் என்றும் இளமை அவர்!

அந்தோணி தேவராஜூக்கும் ரெஜினா மேரி நிர்மலா தம்பதிக்கும் மகளாக பிறந்த எல்.ஆர். ஈஸ்வரியின் முழுப்பெயர் லூர்து மேரி ராஜேஸ்வரி. தந்தைக்கும் தாய்க்கும் இருந்த இசையார்வம் இயல்பிலேயே ஈஸ்வரிக்கும் இருந்ததில் வியப்பில்லை. சிறுவயதிலேயே இவரது தந்தை இறந்துவிட, பள்ளிப்படிப்பை பத்தாம் வகுப்பிற்கு மேல் தொடர முடியாமல் போய்விட்டது. இவரது தாய் ஜெமினி ஸ்டுடியோவில் கோரஸில் பாடல் பாடுபவராக இருந்தார். இதனால், ஈஸ்வரியின் தாயும் தன் தாயுடன் கோரஸ் பாடகியாக திரையுலகில் நுழைந்தார்.

எல்.ஆர்.ஈஸ்வரி...

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாக கோரஸ் பாடி வந்தவருக்கு தனிப்பாடகியாக வேண்டும் என்ற ஏக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் தான் ஏ.பி. நாகராஜனும், மகாதேவனும் இவரது குரலைக் கேட்டு, பாட வாய்ப்புக் கொடுத்தனர். அதேபோல, தனது வளர்ச்சிக்குத் துணையாக இருந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனையும் இன்றும் மறக்காதவர் ஈஸ்வரி. ’வளைகாப்பு’ படத்தில் ஹம்மிங் பாடியவரின் குரலைக் கேட்ட இயக்குநர் ஏ.பி.நாகராஜனும் இசையமைப்பாளர் மகாதேவனும் அவரது குரல் வளத்தைப் பாராட்டினார்கள். பின்பு, இவரது முழுப்பெயரை சுருக்கி எல்.ஆர்.ஈஸ்வரி எனத் திரையுலகிற்கு பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஏ.பி. நாகராஜன். அதன் பிறகு தொடர்ச்சியாக விஸ்வநாதன் -ராமமூர்த்தி, மகாதேவன் இசையில் பாடி வந்தவரை ’பட்டத்துராணி பார்க்கும் பார்வை’, ‘எலந்தப்பழம்’, ‘பளிங்கினால் ஒரு மாளிகை’, ‘காதோடுதான் நான் பாடுவேன்’ போன்ற பாடல்கள் புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது.

ஒரு பக்கம் ஹஸ்கி வாய்ஸில் உருக வைத்துக் கொண்டே, இன்னொரு பக்கம் பெப்பி வாய்ஸிலும் ஆட்டம் போட வைத்தார் எல்.ஆர். ஈஸ்வரி. சினிமாவில் இதுபோன்ற பாடல்களில் கோலோச்சிய எல்.ஆர். ஈஸ்வரி இன்னொரு பக்கம் , ’செல்லாத்தா செல்ல மாரியாத்தா’, ’ஆத்தா கருமாரி’, ’மாரியம்மா எங்கள் மாரியம்மா’, ’கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா’ என ஏராளமான பக்திப் பாடல்களில் உருக வைத்தார்.

எல்.ஆர்.ஈஸ்வரி...

குடும்ப சூழல் காரணமாக பாடகியாக வலம் வந்தவர் தன் அம்மா, தம்பி, தங்கைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தார். இவரது திருமணம் குறித்தான வதந்திகள் வந்தபோது, ‘நான்தான் சங்கீதத்தைத் திருமணம் செய்து கொண்டேனே’ என்றார் சிரித்துக் கொண்டே. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது கொங்கிணி, துளு, துர்க்கி, மராட்டி, ஹிந்தி, ஒரியா என பத்து மொழிகளிலும் பாடி இருக்கிறார்.

தான் பிறந்த ஊர் மதுரை என்றாலும் வளர்த்த சென்னை தான் தனக்கு மிகவும் பிடித்தமான ஊர் என்பார் ஈஸ்வரி.

எல்.ஆர்.ஈஸ்வரி...

இதுவரைத் தான் பாடிய பாடல்களிலேயே, 'பணமா பாசமா’ படத்தில் இடம்பெற்ற ‘எலந்தப் பழம்’ பாடல்தான் தனக்கு பாடுவதற்கு எளிதாக அமைந்த பாடல் எனவும், மிகவும் கஷ்டப்பட்டு பாடிய பாடலாக ‘சிவந்த மண்’ படத்தில் ‘பட்டத்து ராணி’ பாடலைச் சொல்வார் ஈஸ்வரி. பாடல், ஹம்மிங், கேவல் என அந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாரும் பாடி இருக்க முடியாது என திரை ஜாம்பவான்களும் ரசிகர்களும் சொல்வதுண்டு.

பத்து மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஈஸ்வரி கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். இசையுலகின் பட்டத்துராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

இதையும் வாசிக்கலாமே...


டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்... மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!

x