ஆண்களைவிட 50% கூடுதலாக பெண்கள் உழைக்க வேண்டியிருக்கு... நடிகர் சூர்யா ஆதங்கம்!


நடிகர் சூர்யா

பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம், அடையாளத்துக்காக ஆண்களைவிட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய (STEM) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் பெண்கள் அதிகளவில் பங்குபெற வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அகரம் அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பாக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் ‘EMPOW HER - 2024’ சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கியது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்துக் கொண்டார். அப்போது மாணவிகளிடையே உரையாற்றினார்.

நடிகர் சூர்யா

அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, "என்னை சுற்றி இருக்கிற பெண்களை மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக பார்த்து இருக்கிறேன். அவர்களால் தன்னலம் பாராமல் பிறருக்காக பணியாற்றும் மனம் உள்ளது. சமுதாயத்தில் அதிகம் படிப்பதும், அதிக மதிப்பெண் வாங்குவதும் பெண்கள். ஆனால், இந்த குடும்ப கட்டமைப்பில் உள்ள சில விசயங்களால் பெண்கள், படிப்பிலோ, வேலையிலோ முடங்கிப் போகும் நிலை ஏற்படுகிறது. இந்த தடைகளை தாண்டி வரும் பெண்களே வெற்றிப் பெறுகின்றனர். விளையாட்டுத் துறைகளில் கூட பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா

மக்களுக்கான உண்மையான தேவையை பூர்த்தி செய்கிற சேவையையும், பொறியியல் தயாரிப்புகளையும் கண்டுபிடிப்பதில் ஆண்களைவிட பெண்களே முன்னணியில் உள்ளனர். பெண்கள் தங்களுக்கான அடையாளம் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களை விட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. ஆனால், 5 ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். அந்தளவுக்கு அவர்களிடம் சக்தி உள்ளது. அவர்களை இன்னும் மேலே கொண்டுவர நாம் அனைவரும் சேர்த்து உழைப்போம்" என்று அவர் வலியுறுத்தினார்.

‘கங்குவா’ படத்தின் அப்டேட் குறித்து மாணவிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,"கங்குவா’ படம் அருமையாக உருவாகி வருகிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. என்னோட டப்பிங் போய்க்கொண்டிருக்கிறது. படம் குறித்த அப்பேட் அடுத்தடுத்து வெளியாகும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x