நடிகர் சங்க கட்டடம் கட்ட ரூ.1 கோடி நிதி கொடுத்தார் விஜய்!


தவெக கட்சி நிறுவனர் விஜய்

சென்னையில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமான பணிக்காக நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டி வைத்த ரஜினி, கமல்

சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணியை ரஜினியும், கமலும் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி வைத்தனர். நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்த பணி முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என்று நாசர் தலைமையிலான சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இந்த கட்டடத்திற்காக தங்களால் முடிந்த உதவியை அளிக்கும்படி நடிகர்கள் உட்பட திரைத்துறையினருக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

கமல் நிதியுதவி

இதனை ஏற்று தங்களால் முடிந்த நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். சமீபத்தில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து புதிய நடிகர் சங்க கட்டிடத்தின் மேம்பாட்டுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் கமலிடமிருந்து காசோலையைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய், இன்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு மறைந்த நடிகரும் தேமுதிக முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பெயரைச் சூட்டவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் இருந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சங்கக் கட்டிடத்தை விரைவில் கட்டிமுடித்து திறப்பு விழாவை நடத்த நடிகர் சங்க நிர்வாகிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ரமலான் நோன்பு... முஸ்லிம் அரசு ஊழியர்களின் பணி நேரத்தில் திடீர் மாற்றம்!

x