நடிகர் விஜயை விட அதிக சம்பளம் வாங்கிய ‘லியோ’ பட நடிகர்!


'லியோ' படத்தில் நடிகர் விஜய்

நடிகர் விஜயை விட தான் அதிகம் சம்பளம் வாங்கியதாக ‘லியோ’ படத்தில் நடித்திருக்கும் மற்றொரு பிரபலம் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பல பிரபலங்கள் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக விஜய் படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும். ஆனால், இந்த முறை சென்னையைத் தாண்டி நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. மலேஷியாவில் நடக்கலாம் எனத் தகவல் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் நடித்துள்ளார்.

விஜய் & மன்சூர் அலிகான்...

முன்பே மன்சூர் அலிகானை ‘கைதி’ படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது கைகூடவில்லை. தற்போது ‘லியோ’ படத்தில் அது நடந்திருக்கிறது. இந்நிலையில், மன்சூர் அலிகான் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் கடந்த 1996ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வசந்தவாசல்’ படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் மன்சூர் அலிகானுக்கு நான்கு லட்சம் ரூபாய் சம்பளம். அதே சமயம் விஜய்க்கோ இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என மன்சூர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.

‘லியோ’ படத்திற்கு முன்பாகவே விஜயுடன் ’செந்தூரப் பாண்டி’, ’தேவா’, ’மின்சார கண்ணா’ ஆகிய படங்களில் மன்சூர் அலிகான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x