#Women'sDay Exclusive: அமிதாப் பச்சன் எனக்குக் கொடுத்த ஹிட்... நடிகை சிம்ரன் நேர்காணல்


தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். எந்த அறிமுகமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து சாதித்தது, தான் எதிர்கொண்ட சவால்கள் என தனது சினிமா பயணம் பற்றிய பல விஷயங்களை ’காமதேனு’ டிஜிட்டலுடனான நேர்காணலில் பேசியிருக்கிறார் சிம்ரன்.

படங்களின் வெற்றி என்பதைத் தாண்டி, சினிமாத்துறையில் ரசிகர்களின் மனதில் நீண்ட நாள் இடம்பெற அழகோடு திறமையும் அவசியம். அப்படி, அழகும் திறமையும் ஒருங்கே பெற்றவர் நடிகை சிம்ரன். கமர்ஷியல் படங்களின் கதாநாயகி என்றாலும் சரி, கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்றாலும் சரி, ’அதெல்லாம் எனக்கு அசால்டுப்பா’ என தமிழ் சினிமாவை கலக்கியவர். தற்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

‘மகளிர் தின’ கொண்டாட்டத்திற்காக அவரை நேரில் சந்தித்தோம். ஒரு மணி நேரத்திற்கும் மேலான உரையாடலில் தனது ஆரம்ப கால சினிமா அனுபவம், தான் எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்து கொண்டார் சிம்ரன்.

சிம்ரன்

நம்மிடம் யதார்த்தமாகப் பேசிய சிம்ரன், “மீடியாவிற்கு வருவதற்கு முன்னால் எனக்குப் பெரிதாக சினிமா குறித்து எந்த எண்ணமும் இல்லை. நான் ஃபேஷன் டிசைனராக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். ஆனால், காலம் வேறு திட்டங்கள் வைத்திருந்தது. ரிஷிபாலா என் அம்மா, அப்பா வைத்த பெயர். சிம்ரன் எனக்கு சினிமா கொடுத்த பெயர். தயாரிப்பாளர், இயக்குநர் சாவன் குமார் தக் தான் எனக்கு இந்தப் பெயர் வைத்தார்.

அவரும் அமிதாப் பச்சன் சார் புரொடக்‌ஷனும் இணைந்து தயாரித்த ஒரு இந்திப் படத்தில் நடித்தேன். அந்தப் படம் சூப்பர் ஹிட். அதன் பிறகுதான் எனக்கு தமிழில் இருந்தும் நிறைய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ரிஷியாக இருந்து நான் சிம்ரனாக மாறிய கதை இதுதான்” என்றார்.

ரஜினி, சிம்ரன்

ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபத்தையும் பகிர்ந்த அவர், “விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் ரஜினி சாருடன் படம் நடிக்கவில்லையே என்ற குறை இருந்து கொண்டேதான் இருந்தது. அந்த வருத்தம் ‘பேட்ட’ படத்தில் நீங்கி விட்டது. ஆனாலும், அதற்கு முன்பே ‘சந்திரமுகி’ படத்தில் மூன்று நாட்கள் ரஜினி சாருடன் சேர்ந்து நடித்தேன். பின்பு வேறு சில பிரச்சினைகள் காரணமாக விலக நேரிட்டது. மிகவும் எளிமையான அன்பான மனிதர் அவர்” என்றார்.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் இருந்த சவால்கள், கதைகள் தேர்ந்தெடுக்கும் விதம், விஜயின் அரசியல் வருகை, ‘என்ன சிம்ரன் இதெல்லாம்?’ என்ற வடிவேலுவின் காமெடி வசனம் என பலதும் குறித்து இந்த நேர்காணலில் ஜாலியாகப் பேசியிருக்கிறார் சிம்ரன்.

இதையும் வாசிக்கலாமே...

ரஹ்மானுக்கு இசையும் பணமும் தான் குறிக்கோள்!

மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்! வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!

x