[X] Close

பரியேறும்பெருமாள் பிஏபிஎல் மேலே ஒரு கோடு!


pariyerumperumal-mele-oru-kodu

பரியேறும் பெருமாள்

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Sep, 2018 11:14 am
  • அ+ அ-

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நாயை, மனிதருக்கு இணையாக வன்மம் வைத்து ரயிலில் சாகடிக்க வைப்பதும் ஒரு நாயை விடக் கேவலமாக, ஒரு சமூகத்தின் மனிதர்களை மிக இழிவாக நடத்தி, தினம் தினம் சாகடிப்பதும்தான் பரியேறும்பெருமாளின் கதை.

புளியங்குளம் பரியேறும்பெருமாளான கதிர், தன் நண்பர்களுடனும் நாய் கருப்பியுடனும் வேட்டைக்குச் செல்ல, அங்கே இன்னொரு ஆதிக்கத்தினர், கருப்பி நாயை தூக்கி வந்து, ரயில் தண்டவாளத்தில் கட்டிவைக்க, ரயிலில் அடிபட்டு இறந்துபோகிறது. இந்தச் சமூகம், நம் சமூகத்தின் மீது எவ்வளவு வன்மம் வைத்து நடத்துகிறது என உணர்ந்து நொந்துகொள்கிறார் கதிர். அப்போது, அவருக்கான மருந்து, ‘சட்டம் படிக்கணும்லே. சட்டம் படிச்சாத்தாம்லே நெஞ்சு நிமிர்த்து எவனையும் கேள்விகேக்கமுடியும்’ என்கிறார் ஊர்க்காரர்.

திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் சேருகிறார். அங்கே அதைவிடக் கொடுமையாய், சாதிவெறி, பேயாட்டம் போடுகிறது. அவருடன் படிக்கும் யோகிபாபுவும் கயல் ஆனந்தியும்தான் கதிருக்கு ஆறுதல். ஆனந்தி தன் அக்காவின் திருமணத்திற்கு கதிரை அழைக்கிறார். அங்கே அரங்கேறும் சாதீயத் தீயின் நெருப்பு, பரியேறும் பெருமாளுக்குள்ளே கங்கெனக் கனன்று கொண்டே இருக்கிறது. ஆனந்தியிடம் விலகி வருகிறார்.

ஒரு கோபம், ஆத்திரம் கதிருக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த சாதிப் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் கொண்ட உலகில், பரியேறும் பெருமாளின் மனநிலை என்ன? ஆதிக்க சாதியின் அட்டூழியங்களில் சுருங்கிக் கொண்டானா, விருட்சமென வெளிக்கிளம்பினானா? ஆனந்தியின் காதல் என்னானது என்பதைச் சொல்லி விரிகிறது திரைக்கதை.

ஆய் ஊய் என்றும் அம்பது நூறு பேருடன் ஸ்கார்பியோக்களில் பறந்தும் முறுக்கு மீசையும் கையில் அரிவாளுமாக கண்களில் வெறி கூத்தாட... ஜாதிவெறியர்கள் வருவார்கள் என்றில்லை. அமைதியாக இருந்துகொண்டே, தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டே இருக்கிற கொடூரத்தை, காட்சி ரீதியாகவும் மனோரீதியாகவும் பொளேரெனச் சொல்லியிருக்கிற இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படம் இது.

ஆதிக்க வெறியையும் ஒடுங்கிக்கிடக்கும் சமூகத்தின் கோபத்தையும் எத்தனையோ படங்கள் சொல்லியிருக்கின்றன. ஆனால் இப்படி முகத்துக்கு முகம் நின்றுகொண்டு, சட்டையைப் பிடித்து உலுக்கி, பொளேர்பளீரென அறைந்து அறைந்து சொன்னதில்தான் சினிமா உலகின் முக்கியமானதொரு இடத்துக்குச் சென்று அமர்கிறார் பரியேறும் பெருமாள்.

‘கோட்டா’ல வந்தவன்தானே நீ என்று புரபஸர் சொல்லும்போது, பார்வையாளர்களிடம் ஜாதிவித்தியாசமின்றி ஒரு கோபம் கொப்புளிக்கிறது. ‘நீ ஸ்ரீவைகுண்டம் இல்லியா. ஸ்ரீவைகுண்டம் பக்கத்துல புளியங்குளமா? ஸ்ரீவைகுண்டம்னு நெனைச்சேன்’ என்று சொல்லும் சாதாரண வசனத்தில், ஸ்ரீவைகுண்ட ஆதிக்க சாதிக்கும் புளியங்குள சமூகத்திற்குமான வித்தியாசப் பாகுபாடு வேறுபாடு மாறுபாடுகளை வெடுக்கென்று சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

கல்லூரியில் அப்பாவை அழைத்து வரச்சொல்ல, ஆனால் அப்பா என்று காசு கொடுத்து ஒருவரை அழைத்து வருகிறார் கதிர். பிறகு தன்னுடைய அப்பாவையே அழைத்து வருகிறார். அப்படி மாற்றி அழைத்து வந்த காரணம்... இன்னொருவிதத்தில் நம்மைத் தாக்குகிறது. அப்போது அந்தக் கல்லூரி முதல்வர், ‘எங்க அப்பா யாரு தெரியுமா? செருப்பு தைக்கிற வேலை பண்ணிட்டிருந்தாரு. ஆனா அதுக்காக, ஒருநாளும் நான் வெக்கப்பட்டதில்ல. அந்தக் கோபத்தையெல்லாம் படிப்புல காமிச்சேன். இன்னிக்கி எனக்கு சல்யூட் போடுற அளவுக்கு உசந்திருக்கேன். நீயும் அப்படி வா’ என்று சொல்லும்போது, தியேட்டரில் அப்படியொரு கைத்தட்டல்.

கருப்பியைக் காதலித்து சிநேகிக்கும் அன்பு, கருப்பியை இழந்ததும் துடித்துத் தவிப்பது, கல்லூரி புரபஸரை டீச்சர் என்று அழைப்பது, யோகி பாபுவின் நட்பு, அம்மா சத்தியமா... என்று சொல்லுவது, கயல் ஆனந்தி நட்பில் கிடைத்த கூடுதல் தெளிவு, தன் தந்தையை அவமானப்படுத்துவது கண்டு துடிப்பது, ஆதிக்கசாதியினர், ஒரு சமூகத்தை முன்பெஞ்ச்சில் உட்காரக் கூட அனுமதிக்காதது கண்டு வெடிப்பது, டெஸ்க்குகளை உடைப்பது, கல்யாண வீட்டு அறையில் அடியும் உதையும் வாங்கிவிட்டு, சுவரோடு சுவராக ஒட்டியபடி பார்க்கிற அந்த ஆயிரம் கேள்விகள் கொண்ட பார்வை, கல்லூரியில் பெண்கள் கழிவறையில் தள்ளிவிட்டு கதவைச் சார்த்த, அங்கே கூனிக்குறுகி, நடுங்கிப் போய் வருகிற நொய்மை... என படம் நெடுக கதிர், கதிரவனைப் போலவே பிரகாசிக்கிறார். ஒரு பொண்ணுகூட பழகினா, அது காதலாத்தான் இருக்கணுமா. நட்பாவே இருக்ககூடாதா என்பது இந்தக் காலப் பசங்களுக்கான செம அட்வைஸ்.

அவர் மட்டும் அல்ல, படத்தில் வருகிற எல்லோருமே வெறுமனே வந்துபோகவில்லை. ஆனால், இயல்பான நடிப்பின் மூலம், நம் மனசுக்குள் வந்துவிடுகிறார்கள். இடைவேளைக்கு முன்னதாக அவ்வளவு தெளிவாக இருக்கும் ஆனந்தி, அடுத்த பாதியில் அவ்வளவாக வரவும் இல்லை. தெளிவும் இல்லை. கதிர், ஆனந்திக்குப் பிறகு ஸ்கோர் செய்கிறார் யோகிபாபு.

முதல் பாதியில் அடுத்தடுத்ததாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் ஒரே இடத்தில் நிற்கிறது. லிங்கேஷ், ஆனந்தியின் அப்பா மாரிமுத்து, 2 ஃபுல்பாட்டிலுக்கு செமயாக நடிக்கும் சண்முகராஜன், முக்கியமாக, ஜாதி வெறி பிடித்த, கொலை செய்யவே அஞ்சாத, மனிதாபிமானமே இல்லாத அந்தப் பெருசு வருகிற காட்சிகளெல்லாம் ‘ஐயோ... இப்போ யாரும் சாகாம இருக்கணுமே’ என்று பயந்து கதிகலங்கவைத்துவிடுகிறார். ஆணவக் கொலைகளை ஜஸ்ட் லைக் தட் செய்துவிட்டு, செய்த குற்றமும் இல்லாமல், பெருமையும் கொள்ளாமல், செத்த பிணம் மாதிரி மூஞ்சியை வைத்துக்கொண்டு போகிற அந்த கராத்தே வெங்கடேஷின் நடிப்பு, படு யதார்த்தம்.

படத்தில் இயக்குநர் மாரிசெல்வராஜின் சிந்தனைக்கு செயலாக்கம் கொடுக்கிறது ஸ்ரீதரின் ஒளிப்பதிவு. நெல்லைச் சீமையின் அழகையும் அந்த அழகே ஒரு துயரச்சாட்சியாக இருப்பதையும் காட்சிகளாலும் ஆங்கிளாலும் உணர்த்திக் கடத்தி விடுகிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர். சந்தோஷ் நாராயணனின் இசை, படத்துக்குத் தேவையானத, தேவையான தருணங்களில் வழங்கி, வலு சேர்க்கிறது.

ஆதிக்க ருசியை அறிந்து, அந்த ருசியுடனேயே இருக்க எதுசெய்யவும் துணிகிறது ஆதிக்க சாதி. விழுந்தவர்கள் எழவேண்டும் என்கிற இயல்புடன் முன்னுக்கு வரத்துடிக்கிறது ஒரு சமூகம். இந்த இரண்டையும்... வன்முறையையும் காட்டி, வன்முறை வேண்டாமே என்கிற மனித நேயத்தையும் உணர்த்தி என வெகு அழகாகக் கையாண்டிருக்கிறார், கதை சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

ஏற்கெனவே சேரனின் பாரதிகண்ணம்மாவும் பாலாஜிசக்திவேலின் காதலும் உலுக்கிச் சொன்னதை, மாரி செல்வராஜ் அறைந்தே சொல்லியிருக்கிறார். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து, இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான படத்தை இயக்கி, அவர்களை விட இன்னும் ஆழமாகவும் ஆழமானதொரு கருத்தை ஆர்ட்டிஃபீஷியலாக இல்லாமல், வெகு இயல்பாகவும் சொல்லி ஜெயித்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

பரியேறும் பெருமாள் பிஏபிஎல் மேலே ஒரு கோடு... அண்டர்லைன் பண்ணப்பட்டதும் கூட!

.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close