பிக் பாஸ்: பிரதீப் அப்படிப் பேசியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அன்ன பாரதி பேட்டி!


அன்ன பாரதி

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இந்த ஏழாவது சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அதிரடியாகப் போய்க் கொண்டிருக்கிறது. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்ற டேக் லைனிற்கு ஏற்ப பல ட்விஸ்ட்களைப் போட்டியாளர்களுக்குக் கொடுத்து வருகிறார் பிக் பாஸ். அந்த வகையில் இந்த சீசனில் அதிரடியாக ஐந்து பிக் பாஸ் போட்டியாளர்களை வைல்ட் கார்டு என்ட்ரியாக கொண்டு வந்தார் பிக் பாஸ்.

அதில் பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதியும் ஒருவர். ஆனால், உள்ளே நுழைந்த ஒருவாரத்திலேயே அவர் வெளியேறிவிட்டார். அவரிடம் பேசினோம்.

பிக் பாஸ் அனுபவம் எப்படி இருந்தது? போனதும் வெளியே வந்துவிட்டோம் என்ற வருத்தம் இருக்கிறதா?

அன்ன பாரதி

புதிதாக இருந்தது. வெளியில் இருந்து நான் பார்த்த பிக் பாஸ் என்பது வேறு. ஆனால், உள்ளே போனதும் எனக்கு அது வேறுமாதிரியாக இருந்தது. கேமராவுக்காக பலரும் அங்கு நடிக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னால் அப்படி உடனடியாக மாற முடியவில்லை. நான் நானாக இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் உள்ளே போனேன். பிக் பாஸ் சூழலுக்கு நான் பொருந்திப் போகவில்லை என்பது உண்மைதான். அதற்காக, ‘நான் டம்மி பீஸு’ என்றெல்லாம் சிலர் கமென்ட் செய்திருந்தார்கள். பரவாயில்லை! அதை எல்லாம் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஒரே வாரத்தில் வெளியே வந்ததில் வருத்தம்தான்.

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த வாரத்தில் நீங்கள் இருந்தீர்கள். இதில் உங்கள் கருத்து என்ன? அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வர வேண்டும் என நினைக்கிறீர்களா?

அன்ன பாரதி

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் உரிமைக்குரல் கொடுத்தது ரெட் கார்டு கொடுத்ததாக மாறிவிட்டது. வெளியே வந்ததும் நிறையப் பேர் என்னிடம், “ஏன் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தீர்கள்?” என கேட்டார்கள். ஆனால், நான் உரிமைக் குரல்தான் எழுப்பினேன். அதற்குக் காரணம், பிரதீப் பேசிய சில வார்த்தைகள்தான். அவர் சில தகாத வார்த்தைகளைப் பேசினார். பிக் பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகளும் பார்ப்பார்கள் எனும்போது அவர் அப்படி பேசியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உரிமைக் குரல் எழுப்ப வேண்டும் என்பது என் தனிப்பட்ட முடிவுதான். மாயா, பூர்ணிமா கேங்குடன் நான் சேரவில்லை. பிரதீப்புக்கு இந்த விஷயத்தில் வார்னிங்தான் கொடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால், அவரை வெளியேற்றிவிட்டார்கள். மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவேண்டுமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

உங்களோடு வைல்ட் கார்டில் நுழைந்த அர்ச்சனா, இப்போது வலுவான போட்டியாளராக மாறி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

அன்ன பாரதி

வந்த சில நாட்கள் வரை அர்ச்சனா அழுது கொண்டேதான் இருந்தார். அந்த சமயத்தில் நானும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து இருக்கிறேன். ஆனால், இப்போது அர்ச்சனா வேற மாதிரி மாறி இருக்கிறார். இந்த அர்ச்சனாதான் ரியல் அர்ச்சனா. அவருக்கு இப்போது கிடைத்துள்ள ஆதரவை அவர் சரியாகப் பயன்படுத்தினால் நிச்சயம் இறுதி வரை செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

மீண்டும் பிக் பாஸூக்குள் வாய்ப்பு வந்தால் உள்ளே போவீர்களா அல்லது வெளியேறிய எந்தப் போட்டியாளர் உள்ளே போனால் சரியாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

அன்ன பாரதி...

நான் ஆரம்பத்திலேயே சொன்னதுபோல, வெளியில் இருந்து பார்த்ததற்கு பிக் பாஸ் வீடு வேறு மாதிரி இருந்தது. உள்ளே வேறு மாதிரி இருந்தது. அதில் எனக்கு செட் ஆவது கொஞ்சம் கடினமாக இருந்தது. இன்னொரு முறை வாய்ப்புக் கிடைத்தால் நான் எந்த அளவுக்கு சிறப்பாகச் செய்வேன் என்பது தெரியவில்லை. அதனால் வாய்ப்பு மீண்டும் அமைந்தால் என்ன முடிவு எடுப்பேன் எனத் தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முன்பு வெளியே போன பிரதீப், விஜய் வர்மா, வினுஷா, ஐஷூ எல்லோருமே ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள்தான். இவர்களில் யாராவது மீண்டும் உள்ளே போனால் நிச்சயம் நன்றாக விளையாடுவார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

x