[X] Close

வின்னர் கைப்புள்ளக்கு 15 வயசு!  


winner-kaippulla

வின்னர் கைப்புள்ள... வடிவேலு

 • வி.ராம்ஜி
 • Posted: 28 Sep, 2018 20:18 pm
 • அ+ அ-

தமிழ் கூறும் நல்லுலகில், டாப் ரேங்க் ஹீரோக்கள் பேசுகிற பஞ்ச் டயலாக்குகள் ஒரு படத்துக்கு எத்தனை இருக்கும்? மிஞ்சிப் போனால், ஒன்றோ இரண்டோ இருக்கும். நாமும் விசிலடித்து, கைத்தட்டி, ஆர்ப்பரித்து, ஆரவாரித்து உற்சாகமாவோம். பிறகு அந்த வசனத்தை சொல்லிக்கொண்டே இருப்போம்.

ஆனால், ஒரு காமெடி நடிகர், ஒரு படத்தில் எத்தனை பஞ்ச் வசனங்கள் சொல்லியிருக்கிறார் தெரியுமா?

இன்றைக்கு அந்த அரசியல் தலைவர்களை இவர்களும்  இந்தப் பக்கமுள்ள அரசியல்தலைவர்களை அவர்களும் இந்தக் கட்சிக்காரர்களை அந்தக் கட்சிக்காரர்களும் வேறுபாடு கொண்டு, பாகுபாடு பார்த்தெல்லாம் கலாய்த்து மீம்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாக் கட்சியினருக்கும் மீம்ஸ் போட, அள்ளியள்ளிக் கொடுத்த கர்ணக் காமெடியன் யார் தெரியுமா? கைப்புள்ளதான்!

நடிகர் வடிவேலுவின் படங்கள் முழுக்கவே காமெடி ரசகுல்லாக்கள் உருண்டுகொண்டே இருக்கும். கரகரமொறுமொறு முறுக்கென, அல்லுசில்லெல்லாம் தெறிக்கவிட்டு குபீர் கிளப்புவார் வடிவேலு. சர்க்கரை இனிக்கும் உப்புக் கரிக்கும் என்பது போலத்தான், வடிவேலு காமெடி செம என்பதும்.

ஆனால் வடிவேலுவின் எக்கச்சக்க கேரக்டர்களில், ஒரேயொரு கேரக்டருக்கு இணையாக இன்று வரை எதுவுமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனானப்பட்ட ரஜினியே சந்திரமுகி பண்ணும்போது, முதல்ல வடிவேலு கால்ஷீட்டை எப்படியாவது வாங்கிருங்க என்று சொன்னதாக மேடையிலேயே சொல்லியிருக்கிறார்கள்.

மிக மோசமான படத்துக்குக் கூட, இளையராஜாவின் பாடல்கள் பிரமாதமாக இருப்பதும் அதை இன்றும் கேட்டு ரசித்து சிலாகிப்பதும் என பயணித்துக்கொண்டிருக்கிறோம். வடிவேலுவின் காமெடியும் அப்படித்தான். எத்தனையோ மோசமான படங்களில், வடிவேலுவின் காமெடி மட்டும் தர்பாராகி, தலைக்கு கிரீடம் போல, படத்துக்கு மகுடமாகிவிடும். படம் சுமார்தான். வடிவேலு காமெடில பின்னிப்பெடலெடுத்திருக்காப்ல… என்று சொல்லுவார்கள். அதற்காகவே இன்னொரு தடவை பார்த்தார்கள். டிவியில் வடிவேலு காமெடி வந்தால், சண்டை போடுகிற கணவனும் மனைவியும் கூட, கப்சிப்பாகி, கிச்சுமுச்சாகிவிடுவார்கள்.

அத்தனை காமெடிகளுக்கும் சிகரம்தான் கைப்புள்ளையின் சேட்டைகளும் கொணஷ்டைகளும்!

இயக்குநர் சுந்தர்.சிக்கு இயல்பாகவே காமெடி களைகட்டும். வடிவேலுவுடன் அவர் கைகோர்த்துக்கொண்டால்… அதுதான் கைப்புள்ள. இயக்குநர் சுந்தர்.சியின் வின்னர் படத்தின் வின்னிங் ஃபார்முலாவே கைப்புள்ளதான்.

படத்தில் நாலஞ்சு பஞ்ச் இருக்கும் என்பதையெல்லாம் தாண்டி, கைப்புள்ள கேரக்டரில் வடிவேலு பேசியதெல்லாம் பஞ்ச்கள்தான். இரண்டு நிமிடம் ஓடக்கூடிய ஒரு காட்சியில், ஆறேழு பஞ்ச் வசனங்களை அசால்ட்டாக சொல்லிக்கொண்டு, போய்க்கொண்டே இருப்பார்.

கமலும் கிரேஸி மோகனும் சேர்ந்த படங்களில், ஒன்று சொல்லுவார்கள். அதாவது, ஒரு காமெடிக்கு சிரித்துக்கொண்டிருக்கும் போதே, நாலு காமெடி போய்விடும் என்பார்கள். வின்னர் கைப்புள்ளயின் வசனங்களும் அப்படித்தான்.

 • இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன். பேச்சு பேச்சாத்தான் இருக்கும்.
 • * ஆமா… யாரு என் சங்கத்து ஆளை அடிச்சது?
 • * அது போன மாசம்…
 • * வேணாம்… வே…ணாம்… வலிக்குது… அழுதுருவேன்…
 • * இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளப்படுத்திடுறாய்ங்க.
 • * சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும்.
 • *சண்டைல கிழியாத சட்டை எங்கேருக்கு?
 • * நல்லா கேக்கறாய்ங்கய்யா டீட்டெய்லு.
 • * இது ரத்தபூமி… குழாயைத் தொறந்தா தண்ணீ வராது. ரத்தம்தான் வரும். இது ரத்த பூமி.
 • * எனக்கு கோபம் வராது… வந்துருச்சுன்னா? அதான் வராதுன்னு சொல்லிட்டேனே…
 • நல்லாக் கிளப்புறாய்ங்கடா பீதிய…
 • * சங்கத்தை ஒடனே கலைங்கடா.
 • * கஷ்டம்னு வந்தா இந்தக் கைப்புள்ள கர்ணனா மாறிருவான்.

இப்படிக் காட்சிக்குக் காட்சி, பேச்சுக்குப் பேச்சு… வசனங்களாலும் பாடி லாங்வேஜாலும் நம்மை சிரிக்கவைத்து ரணகளப்படுத்தியிருப்பார் கைப்புள்ள.

அவரின் நடையும் எகத்தாளப் பேச்சும் பம்மிப் பதுங்கி சரண்டராவதும் அடியும் உதையும் வாங்கிவிட்டு, வீறாப்பாக, கெத்துக் காட்டித் திரிவதெல்லாம் எத்தனை தேசிய விருதுகள் கொடுத்தாலும் தகும்.

*ஓபனிங்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையேப்பா.

* ஆஹா… இது வேறயா…

*சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு.

* ஏன் இந்த ரத்தவெறி?

இப்படி மதுர ஸ்லாங்கில்,நம்மை வகைதொகை இல்லாமல் சிரிக்க வைத்திருப்பார் கைப்புள்ள.

*போய் ஊருக்குள்ளே எங்களைப் பத்தி கேட்டுப்பாருங்க தம்பி. அடி வாங்காத ஏரியாவே கிடையாது. எவ்ளோ அடிவாங்கினாலும் சத்தமும் வராது. ஓடினதும் கெடயாது.

* ஹலோ… நேத்து நீங்க அடிக்க வரேன்னீங்க. வரவே இல்ல.

* ஹல்ல்ல்ல்ல்லோ... நான் வருத்தமில்லா வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள பேசுறேன். 

இப்படி கைப்புள்ளயின் ரணகள, அதகள, சரவெடிக் காமெடிகளை கொளுத்திப் போட்டுக்கொண்டே இருப்பார் சுந்தர்.சி.

அந்தக் கைப்புள்ள… அதான் வின்னர்… செப்டம்பர் 27, 2003 அன்று ரிலீசானது. அதாவது கைப்புள்ள நமக்கு அறிமுகமாகி, 15 வருஷம் முடிஞ்சு, இப்ப, 16வது வருஷம் ஆரம்பிச்சாச்சு.

இன்னும் எத்தனை வருஷங்கள் கடந்தாலும், கைப்புள்ள ராஜாங்கம் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கும். வின்னர் கைப்புள்ள வாழ்க!

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close