ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதுமட்டுமல்லாது, மேடையிலும் அவர்கள் ஆடிப்பாடி வந்த விருந்தினர்களை மகிழ்ச்சிப் படுத்தினர். இதற்காக அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வாரியிறைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் அம்பானி வீட்டுத் திருமணக் கொண்டாட்டம்தான் பேசு பொருளாக இருந்தது. மார்ச்1 முதல் மார்ச்3 வரை ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நடந்தது. குஜராத், ஜாம்நகரில் நடந்த இதில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட பாலிவுட்டில் இருந்து அனைத்து முக்கிய நடிகர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஆனந்த் அம்பானி- ராதிகாவின் சங்கீத் நிகழ்ச்சி இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தின் ஹைலைட் எனச் சொல்லலாம். ஹாலிவுட் பாடகி ரிஹானாவின் துள்ளல் நடனம், பாடல், அம்பானி தம்பதியின் கலக்கல் நடனம், குறிப்பாக ராதிகா-ஆனந்த் அம்பானியின் ரொமாண்டிக் நடனமும் பார்ப்பவர்களையும் உற்சாகப்படுத்தியது.
இந்த உற்சாகத்தை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பல பாலிவுட் பிரபலங்களும் மேடையில் நடனம் ஆடினர். இதற்காகதான் இவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கத்ரீனா கைப் மற்றும் அவரது கணவர் விக்கி தம்பதிக்கு நடனம் ஆட ரூ. 3 கோடியும், ரன்வீர் சிங்- தீபிகா ஜோடிக்கு ரூ. 1 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நிகழ்வில் பங்கேற்க ரூ. 1.5 கோடியும் நிகழ்வில் நடனம் ஆடுவதற்கு தனியே ரூ. 2.5 கோடியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், சல்மான்கான் பங்கேற்க ரூ. 2 கோடியும், நடனம் ஆட ரூ. 3 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி... 7 மாநிலங்களில் NIA தீவிர சோதனை!