மீண்டும் பாலிவுட் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்!


ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட் மீது மீண்டும் ஒருமுறை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இதையொட்டி சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டியில் இந்தி திரையுலகம் குறித்து பேசியுள்ளார்.

அதில், “தெலுங்கிலிருந்து ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. பாலிவுட் என்றால் இந்தி திரையுலகம் மட்டும் தான் என்று பலரும் நினைக்கிறார்கள். பாலிவுட் என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதில்லை. அது ஹாலிவுட் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. பாலிவுட் என்று யாராவது சொன்னால் அதை நான் திருத்துவேன்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

நல்ல திறமைசாலிகளுக்கு பண உதவியும், வெளிச்சமும் கிடைத்தால் நல்ல படைப்புகளுடன் மேலே வருவார்கள். அந்த படைப்புகள் இந்தியா போன்று பலதரப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தியா என்பது ஒரு கலாசாரம் அல்ல. பல கலாசாரங்கள் இணைந்தது. திரைப்படங்களுக்கு இசையமைத்தால் தான் அப்படியான உதவிகள் கிடைக்கும் என்பதை ‘ரோஜா’ வாய்ப்பு கிடைக்கும் முன்பு நான் உணர்ந்து கொண்டேன். என்னுடைய குருவாகவும், நண்பராகவும் இருக்கும் மணிரத்னம், ஷங்கர், ராம்கோபால் வர்மா, சுபாஷ் கை போன்றவர்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்” என்று ரஹ்மான் பேசியுள்ளார்.

இதற்கு முன்பு இந்தி திரையுலகில் நெப்போட்டிசம் குறித்தும், தமிழன் என்பதாலேயே பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளதையும் ஏ.ஆர்.ரஹ்மான்வருத்தத்துடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x