நடிகர் அஜித் படத்தைத் திட்டி ட்வீட் போட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை காயத்ரி ட்வீட் செய்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர்கள் அஜித், அபிராமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தப் படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த படம் குறித்தான விஷயங்களை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் இணையத்தில், ‘நடிகர் அஜித் தனது சினிமா பயணத்தில் எடுத்த தவறான முடிவு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரீமேக். அது முழுக்க முழுக்க ஏ செண்டர் பார்வையாளர்களுக்கான படம். குறிப்பாக ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றி அவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸை கொண்டு வந்தது. அதற்கு பிறகு இந்தப் படத்தில் நடித்தது அவருக்கு பின்னடைவு. குறிப்பாக, 'நேர்கொண்ட பார்வை’ படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட கமர்ஷியல் காட்சிகள் சுத்தமாக செட் ஆகவில்லை’ எனக் கூறியுள்ளார்.
இதற்கு நடிகை காயத்ரி பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஒரு படத்தின் வெற்றிக்கு பாக்ஸ் ஆஃபிஸ் என்பதை மட்டுமே அளவுகோலாக வைக்கக் கூடாது. அது சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும். அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இனிமேலும் அது தொடரும்’ என ட்வீட் செய்துள்ளார்.