நடிகர் ரஜினியை நேரில் சந்திப்பதற்காக சேலத்தில் இருந்து நள்ளிரவு போயஸ்கார்டன் வந்த 10ம் வகுப்பு மாணவியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவியை மீட்டு உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நடிகர் ரஜினி வீட்டிற்கு சென்று, அங்கிருந்த காவலாளியிடம் ரஜினிகாந்த்தை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். உடனே காவலாளி அவரை இப்போது பார்க்க முடியாது, நீ எங்கிருந்து வருகிறாய் என கேட்டபோது, அதுபற்றி பதில் ஏதும் பேசாத சிறுமி நடிகர் ரஜினியை பார்த்தே ஆக வேண்டும் என அடம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற காவலாளி உடனே இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு சென்ற போலீஸார் சிறுமியிடம் சாதுர்யமாக பேசி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகள் என்பது தெரிய வந்தது. மேலும் 15 வயதுடைய சிறுமி பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருவது தெரிய வந்தது.
சிறுமி பெற்றோரிடம், ஆசிரியரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு நேற்று காலை சேலத்தில் இருந்து பேருந்தில் சென்னைக்குப் புறப்பட்டிருக்கிறார். இரவு கோயம்பேட்டிற்கு வந்து பின்னர் அங்கிருந்து நடிகர் ரஜினியைப் பார்க்க வேண்டி போயஸ் கார்டனுக்கு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் போலீஸார் சிறுமியிடம் சென்னையில் இருக்கும் உறவினர்கள் குறித்து விசாரணை நடத்தி தகவலைப் பெற்று, சென்னை பல்லாவரம் பம்மல், ரகுபதி தெருவில் வசிக்கும் சிறுமியின் சின்னபாட்டியான சின்னப்பொண்ணு (60) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவல் நிலையம் வந்த சிறுமியின் உறவினர்களிடம் போலீஸார் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர். சேலத்தில் இருந்து பள்ளி மாணவி தனியாக நடிகர் ரஜினியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.