இந்த விஷயம் உங்களுக்கும் நடந்தால் அப்போதுதான் நீங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் என தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேசி இருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் கலந்து கொண்டு பேசியதாவது, ‘நான் இன்னும் ’ஜெயிலர்’ படம் பார்க்கவில்லை. ஆனால், இதுவரை படம் பார்த்தவர்கள் அனைவரும் ’சூப்பர்’ எனப் பாராட்டி உள்ளனர். இந்தப் படத்தின் கதையை முதலில் கேட்டது ரஜினி சார் தான். கதை கேட்டதும், 'கதை அருமையா இருக்கு, நெல்சன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று சொன்னார். இதே வார்த்தையை தான் ’எந்திரன்’ படத்திற்கும் சொன்னார்.
பல தலைமுறைகள் கடந்து ரஜினி சாருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். என்றுமே ரஜினி சாருக்குப் போட்டி அவரே தான். வேறு யாரும் இல்ல. ரஜினி சாருக்கு இப்போது 72 வயதாகிறது. அவரின் வாய்ப்புக்காக இன்னும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதே போல, உங்களுக்கும் நின்றால்... அப்போது சொல்லுங்க, ‘நான் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்று. அது வரைக்கும் இந்திய திரையுலகிலே ரஜினி சார் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்பது தான் உண்மை" என்றார்.