வளைச்சு வளைச்சு திட்டறாங்க... ’பாக்கியலட்சுமி’ நடிகை ரேமா அசோக் பேட்டி


ரேமா அசோக்

’பாக்கியலட்சுமி’ சீரியலில் புது வில்லியாக கதையில் நுழைந்திருக்கிறார் ரேமா அசோக். மாலினி என்ற கதாபாத்திரத்தில் செழியன் - ஜெனி வாழ்க்கையில் இவர் கொளுத்திப் போட்ட வெடிதான் சரவெடியாக இப்போதைய எபிசோடில் எரிந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங் பிஸியில் இருந்த ரேமாவிடம் பேசினோம்.

’நல்லாருந்த குடும்பத்தை இப்படி பண்ணிட்டியே’ன்னு நிறைய திட்டு வந்துட்டு இருக்கா?

ரேமா அசோக்

அய்யயோ! அதை ஏன் கேக்கறீங்க? நேர்ல பாக்கும்போது திட்டறவங்க ஒரு பக்கம்ன்னா... இன்னொரு பக்கம் சோஷியல் மீடியாலையும் வளைச்சு வளைச்சு திட்டிட்டு இருக்காங்க. இதெல்லாம் வெறும் நடிப்புதான். நிஜத்துல நான் ரொம்ப நல்லவ! நம்புங்கப்பா ப்ளீஸ்... இந்த திட்டெல்லாம் என்னுடைய நடிப்புக்கு கிடைக்கற பாராட்டுன்னு நினைக்கும்போது சந்தோஷமாவும் இருக்கு. மீடியாவுக்கு வந்த பத்து வருஷத்துல ‘பாக்கியலட்சுமி’ சீரியல் எனக்கு அதிக பிரபல்யம் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி.

இந்த சீரியலில் முதலில் உங்கள் கதாபாத்திரத்தில் தீப்தி நடித்துக் கொண்டிருந்தார். திடீரென நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்?

ரேமா அசோக்

மற்ற சீரியல்களைப் போலத்தான் இதன் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. தீப்தி ஏன் திடீரென விலகினார் என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. எந்தக் கதாபாத்திரம் வந்தாலும் அதை நான் முழு மனதாக சரியாகச் செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பேன். அதை நான் சரியாக செய்து கொண்டிருப்பதால் தான் இந்த பாராட்டு கிடைத்துக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்கு என்னுடைய ஸ்டைலிங்கும் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள்.

நெகட்டிவ் ரோலில் நடிக்கிறோமே என வருத்தப்பட்டதுண்டா?

மதுர பொண்ணு நான். அதனால இயல்பாகவே நான் தைரியமாக இருப்பேன். என்னுடைய முகமும் பார்ப்பதற்கு போல்டாக இருக்கும் என்பதல் பலரும் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டோ என நினைப்பார்கள். ஆனால், நான் அப்படி இல்லை என்பதை இப்போது மீண்டும் சொல்கிறேன். நல்லவளாக நடிப்பதை விட நெகட்டிவாக நடிக்கும்போதுதான் நடிப்புக்கு நிறைய சவால் இருக்கும். அதனால், இதை விரும்பியே செய்கிறேன்.

மீடியாவுக்கு வந்த புதிதில் நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்தது. அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் அம்மா என்னிடம் இதுகுறித்துப் பேசினார். நெகட்டிவ் கமென்ட்ஸ் சொல்லும் பாதி பேர் நெகட்டிவிட்டியை பரப்பத்தான் பேசுகிறார்கள். அவர்கள் சொல்லும் விஷயம் நியாயமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இல்லை என்றால் அதை விட்டு விலகுவது நல்லது எனச் சொன்னார். அதைத்தான் நான் இப்போது வரை பின்பற்றுகிறேன்.

மதுரையில் இருந்து எப்படி சீரியலுக்குள் வந்தீர்கள்?

ரேமா அசோக்

இந்த விஷயத்தில் என்னுடைய பெற்றோருக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். அப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற நிகழ்ச்சிக்கான ஆடிஷன் குறித்து அறிவிப்பு வெளியானது. அதைப் பார்த்துவிட்டு என் அம்மா, அப்பாதான் என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.

அதன் பிறகு நடனத்தில் கலா மாஸ்டரிடம் ட்ரெயின் ஆனேன். அப்படித்தான் மெதுவாக மீடியாவுக்குள் வந்தேன். நடிக்கக் கூடாது, படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்பது போன்ற ஸ்ட்ரிக்ட்டான அம்மா- அப்பா எனக்கு இல்லை. அவர்கள் என்னை இதுபோன்ற விஷயத்தை ஊக்குவித்ததால் என்னால் இந்த நிலைக்கு வரமுடிந்தது. அம்மா டீச்சர் என்பதால் படிப்பு விஷயத்தில் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்.

பிக் பாஸ் இப்போது பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறதே... கவனிக்கிறீர்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகப்பெரிய ரசிகை நான். ஒவ்வொரு சீசனையும் தவறாமல் பார்ப்பேன். ஆனால், கொஞ்சம் பிஸியாக இருப்பதால் இந்த சீசனை சரியாக ஃபாலோ செய்ய முடியவில்லை. நடனம், நடிப்பு என அதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

x