‘மிஸ் தமிழ்நாடு’ அழகியை மணக்கிறார் காளிதாஸ் ஜெயராம்... நிச்சயதார்த்த வைபோகம் வைரல்


காளிதாஸ் - தாரிணி

பிரபல தென்னிந்திய நடிகர் ஜெயராம் மகனும், இளம் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் ’மிஸ் தமிழ்நாடு’ அழகியான தாரிணி காளிங்கராயரை மணக்க இருக்கிறார்.

காளிதாஸ் - தாரிணி

மலையாளத்தில் அறிமுகமானபோதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் மக்களின் அபிமானத்துக்குரிய நடிகராக வளையவருபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம், இளம் நடிகராக தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் முன்னேறி வருகிறார். இந்த நிலையில் தாரிணி காளிங்கராயர் என்பவருடன் காளிதாஸின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

காளிதாஸ் - தாரிணி

நகைச்சுவை, குணச்சித்திரம் என சகல கதாப்பாத்திரங்களிலும் கவர்ந்தவர் ஜெயராம். அண்மையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியானாக ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவரது மகன் காளிதாஸ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் ’மீன்குழம்பும் மண்பானையும்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் மகனாக நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டுமன்றி ஓடிடி தளங்களிலும் காளிதாஸ் சிறப்பித்து வருகிறார். குறிப்பாக ’பாவ கதைகள்’ ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கிய ‘தங்கம்’ கதையில் சத்தார் என்ற பால் புதுமையராக தோன்றி கவனம் ஈர்த்தார். தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படத்திலும் காளிதாஸ் நடித்து வருகிறார்.

காதல் ஜோடியாக காளிதாஸ் - தாரிணி

தாரிணி காளிங்கராயர் 2019ல் ’மிஸ் தமிழ்நாடு’ அழகிப் போட்டியில் பட்டம் சூடியவர். மாடல் உலகில் பிரபலமான இவர் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். காளிதாஸ் - தாரிணி காதல் தற்போது பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் கல்யாணத்தில் நிறைவேற இருக்கிறது. இதற்கான திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இருவீட்டார் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ இந்த நிச்சயதார்த்த விழா விமரிசையாக நடைபெற்றது.

x