ஒரு கோழை மாவீரான மாறி தன் மக்களை காப்பாற்றும் அதே பழைய ஃபார்முலா திரைப்படம் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் இந்த மாவீரன்.
வட சென்னை பகுதியில் தரமற்ற நிலையில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள், தாமாக இடிந்து விழுந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த மாவீரன் கதை எழுதப்பட்டுள்ளது.
வட சென்னை அருகே பாயும் கொசஸ்தலை ஆற்றின் கரையில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கு அரசு சார்பில் புதிய குடியிருப்பு கட்டித்தரப்படுகிறது. புதிய வீட்டிற்கு நம்பிக்கையுடன் செல்லும் மக்களுக்கு, அதிர்ச்சி தரும் வகையில் அந்த வீடுகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டிருப்பது தெரியவருகிறது. அந்த வீடுகளைக் கட்டியது அமைச்சருக்கு சொந்தமான நிறுவனம் என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது. அந்தக் குடியிருப்பில் வசிக்கும் சிவகார்த்திகேயன் ஒரு விபத்தில் சிக்கி அவருக்கு திடீரென ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அந்தப் பிரச்சினையுடன் அவர் எப்படி அமைச்சரை எதிர்கொண்டார், மக்களை எப்படி காப்பாற்றினார் என்பதே மாவீரன் படத்தின் மீதிக் கதை.
சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன். வறுமையான சூழலில், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளத் தைரியமில்லாமல் அனைத்திலும் அஞ்சி விலகும் ஒரு ஆளாக சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஒரு ஆர்டிஸ்டாக வரும் அவர், தனது கற்பனை மற்றும் படைப்பு திறன் மூலம், சமூக அவலங்களை ஓசையின்றி தட்டிக்கேட்கிறார். அதனை மிகைப்படுத்தலின்றி, சிறப்பாகச் செய்திருக்கிறார் சிவா.
தனக்குள் கேட்கும் குரலுக்கு அவர் எதிர்வினையாற்றும் போது தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். கதாநாயகனுக்கு அடுத்தபடியான முக்கிய கேரக்டர் வில்லனாக வரும் மிஷ்கினுடையது. அரசியல்வாதியாக வரும் அவர், பழிவாங்கத் துடிக்கையிலும், சிவகார்த்திகேயனின் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் போதும் குறும்புத்தனமான நடிப்பில் ஜமாய்க்கிறார் மிஸ்கின்.
நாயகியாக அதிதி ஷங்கர். நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் வழக்கமாக எந்தளவுக்கு நாயகிக்கு முக்கியத்துவம் இருக்குமோ அதுவே அதிதிக்கு. யோகிபாபுவுக்கு கதையோடு பொருந்தும் காமெடி கதாபாத்திரம். கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார்.
நாயகன், வில்லனுக்கு அடுத்தபடியாக முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பது நாயகனின் அம்மாவாக வரும் சரிதா. மகனனுக்காக கண் கலங்கும் போதும், மகனுக்கு வீரம் வந்திருப்பதை அறிந்து மகிழும் போதும் அவரது நடிப்பு கச்சிதம். படத்தில் மிஷ்கினின் நண்பராக வரும் தெலுங்கு நடிகர் சுனிலின் கதாபாத்திரம் சுமாராக எழுதப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது. படத்தில் முகமே காட்டாமல் குரல் வழியாக வருகிறார் விஜய் சேதுபதி. பாதி படத்திற்கு மேல் இவரது குரல் வழியாகவே கதை சொல்லப்படுகிறது.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் மடோன் அஸ்வின் ‘மண்டேலா’ படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சமூக அவலத்தை கமர்ஷியல் படமாக கொடுக்க முயன்று அதில் ஜெயித்திருக்கிறார். ஒளிப்பதிவு விது அய்யனா. படத்தின் கதை சொல்லலுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகச் செய்திருக்கிறார். எடிட்டிங் ஃபிலோமின் ராஜ். படம் தொய்வின்றி நகர இவரது எடிட்டிங் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறது. இசை பரத் ஷங்கர், வங்கக்கரை பாடலும், வண்ணாரப்பேட்டையில பாடலும் ஏற்கெனவே ஹிட் அடித்திருந்த நிலையில், தீம் மியூஸிக்கும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.
கோழை நாயகன் வீரனாக மாறி ஜெயிக்கும் வழக்கமான டெம்பிளேட் கதைதான் என்றாலும், அதற்கான லாஜிக், விறுவிறுப்பான திரைக்கதை என வெற்றிக்கான அனைத்து ஃபார்முலாக்களும் ஒருங்கே கையாளப்பட்டிருப்பதால் மாவீரன், சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு மகுடம்!