நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
’லியோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளை கவனித்து வருகிறார். லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸூக்குள் இல்லாமல் இது தனிப்படமாக உருவாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், ’தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பவர் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பே ‘விக்ரம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால், தேதி பிரச்சினைகள் காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. இந்த நிலையில், ரஜினியின் 171வது படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.