சென்னை: நான் நடிகைதானே தவிர பொது சொத்து கிடையாது என்று நடிகை தாப்ஸி விளக்கம் கொடுத்துள்ளார்.
’ஆடுகளம்’, ‘கேம் சேஞ்சர்’ போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை தாப்ஸி. இப்போது பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்து வருகிறார். தன் கருத்துகளை வெளிப்படையாகவும், தைரியமாகவும் எடுத்து வைக்கும் நடிகர்களில் தாப்ஸியும் ஒருவர்.
தனிப்பட்ட சுதந்திரம் குறித்தும் சினிமாவில் பெண்களின் நிலை பற்றியும் நடிகை தாப்ஸி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். மேலும், பாலிவுட்டில் நிலவி வரும் ‘Paparazzi' புகைப்படக்கலைஞர்கள் கலாச்சாரம் பற்றியும் காட்டமாக பேசியுள்ளார்.
“திரைக்குப் பின்னால் நான் ஒரு விஷயத்திற்கு நோ என்று சொன்னால் நோ தான். சினிமா எனக்குப் பிடித்தமான தொழில் என்றாலும் திரையில் நடிப்பதைப் போல நிஜ வாழ்க்கையிலும் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் இப்படி சொல்வதால் இந்த சினிமா எனக்கு ஏற்ற தொழில் இல்லை என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், இது நான் விரும்பும் தொழில்” என நடிகை தாப்ஸி கூறியிருக்கிறார்.