[X] Close
 

’மும்தாஜ் வெளியே வந்தால் முதல் ஆளாக வரவேற்பேன்’ - மஹத் பேட்டி


mahath-exclusive-interview

  • kamadenu
  • Posted: 11 Sep, 2018 10:12 am
  • அ+ அ-

அனுக்ரஹா சுந்தரவேலு,
தி இந்து ஆங்கிலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி 12 வாரங்களைக்  கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்கள் களமிறங்கிய பிக் பாஸ் வீட்டில் தற்போது 7 பேர்களே உள்ளனர். 

சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸிலிருந்து கமல்ஹாசனால் ’சிவப்பு அட்டை’ கொடுக்கப்பட்டு மஹத் வெளியேற்றப்பட்டார். ’தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி இதோ:

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர்ந்தேன். நான் வெற்றி பெற வேண்டும் என்று உள்ளே செல்லவில்லை. ஒரு புது அனுபவத்தை பிக்பாஸ் வீடு தரும் என்று எண்ணத்தில்தான் சென்றேன். நிறைய பேருக்கு இப்போது என்னைத் தெரிகிறது என்றால் அதற்குக் காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இதை என்னுடைய வாழ்க்கையில் அடுத்தகட்ட வளர்ச்சியாக நினைக்கிறேன்.

இது போன்ற அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களோடு வாழ்வது நமது இன்னொரு முகத்தை வெளிக்கொண்டு வரும் என்று நினைக்கிறீர்களா?

பிக்பாஸ் வீடும் மற்ற வீடுகளை போலத்தான். நம் வீட்டில் என்ன நடக்குமோ அதுதான் அங்கேயும் நடக்கிறது. நாங்கள் அதை ஒரு குடும்பமாக எண்ணினோம். எங்களுக்குள்ளும் மகிழ்ச்சி, சோகம், கருத்து வேறுபாடு அனைத்தும் இருந்தது. அங்குள்ளவர்கள் மற்றவர்களைப் பற்றி அவர்களாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இதுதான் அங்கு நடக்கும் பிரச்சினைகளுக்குக் காரணம். ஒரு வாரம் நான் வில்லனாக இருப்பேன். அடுத்த வாரம் வேறொருவர். நான் பல விஷயங்களைக் அங்கு கற்றுக் கொண்டேன். அதற்கு பிக்பாஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள். அதை ஒப்புக் கொள்கிறீர்களா?

என்னுடைய கோபம் தவறான இடத்தில் பயன்படுத்தப்பட்டதாகவே நினைக்கிறேன். கமல்ஹாசன் சொன்னது போல அங்கு நடப்பது குழாயடி சண்டை போலத்தான். மும்தாஜிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக வருந்தினேன். அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தால் முதல் ஆளாக நான்தான் போய் வரவேற்பேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது உங்களுக்கு எப்படிப்பட்ட அனுபவமாக இருந்தது?

நான் கமல்ஹாசனைப் பார்த்தே வளர்ந்தவன். அவரது அறிவுரைகள் எங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள பக்கபலமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் என் பெயரைச் சொல்லி அழைக்கும் போது அதை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரமாக பார்க்கிறேன்.

யார் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறீர்கள்?

ரித்விகா வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால் ஐஸ்வர்யாவும் நல்ல போட்டியாளர். சில சமயம் அடுத்தவர் பேச்சை கேட்டுக் கொண்டு அதற்கேற்றாற் போல நடக்கிறார். மற்றபடி ஐஸ்வர்யா நேர்மையானவர். மற்றவர்கள் பாதுகாப்பாக விளையாட அவர் மட்டும்தான் மனதில் தோன்றுவதை பேசுகிறார் என்று நினைக்கிறேன்.

உங்களுடைய அடுத்தகட்ட திட்டம் என்ன?

இன்னும் பிக்பாஸ் வீட்டின் தாக்கத்தில் இருந்து நான் மீளவில்லை. தினமும் காலையில் விழிக்கும்போதோ அல்லது  போன் ஒலித்தாலோ பிக்பாஸ் குரல் கேட்பது போல உணர்கிறேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததுமே சில பெரிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வந்திருக்கின்றன. இதற்கெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழில் : சல்மான்

[X] Close