'விக்ரம்’, ‘வாரிசு’ படங்களில் மிஸ்ஸான வாய்ப்பு ‘லியோ’ படத்தில்தான் கைகூடி இருக்கிறது என இயக்குநரும், நடிகருமான கெளதம் மேனன் கலகலப்பாக ‘லியோ’ வெற்றி விழாவில் பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, மிஷ்கின், மடோனா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன் என படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநரும், நடிகருமான கெளதம் மேனன் பேசுகையில், “நான் கேட்டது 'யோகன்- அத்தியாயம் ஒன்று'. ஆனால், அவர் கொடுத்தது ’லியோ’. நான் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் விஜயுடன் நடித்தது கனவு. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு லோகேஷுக்கு நன்றி.
முதலில் லோகேஷ் என்னை ‘விக்ரம்’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். அது சில காரணங்களால் நடக்கவில்லை. அதேபோல, விஜயுடன் ‘வாரிசு’ படத்தில் அவரது அண்ணனாக நடிக்க வேண்டியதும் மிஸ்ஸானது. இப்போதுதான் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது” என்றார்.
மீண்டும் 'யோகன்’ படம் உருவாக வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, ”விஜய் ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மிஷ்கின் சொன்னார். அப்படி பார்த்தால் ’யோகன்’ தான் ஜேம்ஸ் பாண்ட். விஜயுடன் நடித்த போது அவர் என்னை மிகவும் செளகரியமாக வைத்துக்கொண்டார். ஜோஸ் இன்னும் சாகவில்லை. அதனால் விஜயுடன் மீண்டும் நடிப்பேன் என நினைக்கிறேன். அதற்கான ஐ அம் வெயிட்டிங்” எனக் கூறியுள்ளார்.