[X] Close

யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல: இயக்குநர் பா.இரஞ்சித்


pa-ranjith-speech-at-pariyerum-perumal-press-meet

  • kamadenu
  • Posted: 10 Sep, 2018 09:40 am
  • அ+ அ-

யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல என்று ‘பரியேறும் பெருமாள்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசினார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. ரஞ்சித் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் பங்கேற்றார்கள்.
இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் பேசியதாவது:

ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. 



எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள்தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விஷயத்தை வேதனையோடு சொன்னார். நான் கஷ்டப்பட்டு ஒரு தேரை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப் பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச் செல்வேன். அதற்கான ஆரம்பம்தான் இந்தப் ’பரியேறும் பெருமாள்’ படம்.

எனக்கிருக்கிற வாய்ப்புகளில் தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள முரண்களை உடைக்கிற வேலையைச் செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா - மகனை இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது. 

என்னால் முடிந்தவற்றை இந்தச் சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்கு உண்டு. அந்த எண்ணம்தான் இப்போதும் என்னை இயக்குகிறது. சில நேரங்களில் குடும்பம், பொருளாதாரம் குறித்த யோசனைகள் எழுந்தாலும், நம்மைச்சுற்றி இருப்பவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவுதான் நம்மை இயங்க வைக்கிறது. நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம்,  என் மனைவி அனிதாதான் எனக்கு ஊக்கமளிப்பார். 

இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜீஸ் என அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு முழு திருப்தியைக் கொடுத்திருக்கிறது. யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதையே விரும்புகிறேன். அந்த வேலையை ’பரியேறும் பெருமாள்’ நிச்சயமாக செய்யும்.

இவ்வாறு பா.இரஞ்சித் பேசினார்.
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close