அரசியல் பிரவேசம்... நடிகர் விஷால் அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி!


நடிகர் விஷால்

இயற்கை ஏதேனும் முடிவெடுக்க வைத்தால் மக்களுக்காக மக்களில் ஒருவனாக குரல் கொடுக்கத் தயங்க மாட்டேன் என நடிகர் விஷால் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய், விஷால்...

நடிகர் விஜயை அடுத்து நடிகர் விஷால் கட்சித் தொடங்க இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில நாட்களாகத் தீவிரமாக வலம் வந்தது. இதனை அடுத்து, இன்று நடிகர் விஷால் கட்சித் தொடங்கி அறிவிப்பை வெளியிடுவார் என்ற செய்தி இணையத்தை பரபரப்பாக்கியது.

இதனையடுத்து நடிகர் விஷால் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சமூகத்தில் நடிகனாக, சமூக சேகவனாக எனக்கு அந்தஸ்து அளித்த உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய ரசிகர் மன்றங்களை சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று கருதினேன். ’இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு’ என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்தக் கட்டமாக, மாவட்ட வாரியாக மக்கள் பணிகள் செய்வதுடன் என் தாயார் பெயரில் இயங்கும் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாம் பெயரில் அனைவருக்கும் கல்வி உதவியும் விவசாய தோழர்களுக்கும் உதவி செய்து வருகிறோம்.

அதுமட்டுமில்லாமல், படப்பிடிப்பிற்கு நான் செல்லும் இடங்களில் அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை. ’நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவரின் வாக்குப்படி என்னால் இயன்றவற்றை செய்து கொண்டிருப்பேன். அது என் கடமை.

மக்கள் நல இயக்கம் மூலம் வரும் பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். வரும் காலக்கட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்கத் தயங்க மாட்டேன்’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலுக்கு வருவேன் என்பதை இந்த அறிக்கையில் சூசகமாகத் தெரிவித்துள்ள விஷால் இப்போது அதற்கான களப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறார் என்பதுதான் இந்த அறிக்கையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், விஜயைப் போலவே வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் விஷால் எனவும் சொல்லப்படுகிறது.

x