நடிகர் விஜயைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் கட்சி தொடங்க இருப்பதாக நேற்று இரவு முதல் விஷால் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் விஜய் சமீபத்தில் ‘தமிழக வெற்றி கழகம்’ என தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். இதனை அடுத்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார். இந்த இரண்டு வருடங்கள் கட்சியைப் பலப்படுத்தும் வேலையை செய்ய இருப்பதாகவும் சொல்லியிருக்கும் விஜய், தற்போது ஒப்பந்தமாகியுள்ள இரண்டு படங்களை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு விரைவில் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஷாலும் விரைவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தான் படப்பிடிப்பு செல்லும் இடங்களில் எல்லாம் நடிகர் விஷால் மக்கள் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். படப்பிடிப்பு நடக்கும் பகுதிகளில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதனைத் தீர்த்தும் வருகிறார் விஷால். தனது ரசிகர் மன்றங்களை விஷால் மக்கள் நல இயக்கம் எனப் பெயர் மாற்றம் செய்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் பூத் கமிட்டிகளையும், பொறுப்பாளர்களையும் நியமித்து இருக்கிறார் விஷால்.
அடுத்தது நேரடி அரசியல் தான் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்த விஷால், விரைவில் கட்சி துவங்க இருப்பதாகவும், கட்சியை அறிவித்தவுடன் விஜய் வழியிலேயே வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் ஏற்கனவே ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து, அது தள்ளுபடி ஆனது குறிப்பிடத்தக்கது.
பொங்கல், தீபாவளி ரிலீஸ் படங்களைப் போல 2026ல் நடிகர் விஜயும், விஷாலும் நேரிடையாக மோதிக் கொள்ளப் போகிறார்கள். கலக்ஷன் யாருக்கு என்பது மக்களின் விரலில் இருக்கிறது.