[X] Close

வெள்ளை சுப்பையா எனும் நடிகரின் சோக மரணம்!


vellai-subbaiah

வெள்ளை சுப்பையா

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Sep, 2018 11:17 am
  • அ+ அ-

கோவைக்கு அருகில் உள்ள புன்செய் புளியம்பட்டிதான் வெள்ளைசுப்பையாவுக்கு சொந்த ஊர். படிப்பு வரவில்லை. ஆங்கிலம் பயமுறுத்தியது. படிப்பை நிறுத்திவிட்டு, என்ன செய்வது என திக்குத்திசை தெரியாமல் தவித்தவருக்கு அடைக்கலம் தந்தது, ஒரு டூரிங் டாக்கீஸ்.

அந்த டூரிங் டாக்கீஸில் வெள்ளைசுப்பையா அடிக்கடி அந்தப் படத்தைப் பார்த்தார். பெரிதும் ஈர்க்கப்பட்டார். அடிக்கடி, படத்தின் வசனங்களைப் பேசிப் பார்த்தார். அந்த நடிகரைப் போலவே நடந்து, நடித்து, வசனம் பேசிக்கொண்டார். ‘நாமளும் சினிமால சேரணும், நடிக்கணும்’ என்கிற ஆசை, வெறி, லட்சியம் அப்போது அவருக்கு ஏற்பட்டது. அந்தப் படம்... கலைஞர் வசனம் எழுதி, சிவாஜி நடித்த பராசக்தி.

அதன் பிறகு, வாய்ப்புத் தேடி வந்தார். முட்டிமோதி, அவமானப்பட்டு, பசியால் வாடி, கால் தேய நடந்து என அலைந்தவருக்கு சின்னச்சின்ன வேடங்கள் கிடைத்தன. அந்தக் காலத்தில், எஸ்.வி.சுப்பையா மிகப் பிரபலம். துணைநடிகராக கருப்புசுப்பையா என்பவர் நடித்துவந்தார்.

ஜெய்சங்கர் நடித்த மாணவன் படத்தில்தான், சாண்டோ சின்னப்பா தேவர், வெள்ளை எனும் அடைமொழியுடன் வெள்ளை சுப்பையாவாக்கினார்.

சின்னச்சின்ன ரோல்கள் பண்ணிவந்த வெள்ளைசுப்பையா, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வருகிற மேகங்கருக்கையிலே பாடலை இவர் பாடி நடித்ததுதான் இவரின் முகம் பரிச்சமாயிற்று. தொடர்ந்து ஆர்.சுந்தர்ராஜன் தான் இயக்கும் படங்களில், வெள்ளை சுப்பையாவைப் பயன்படுத்தி வந்தார்.

அதேபோல், இளையராஜா, கங்கைஅமரன், சங்கிலிமுருகன் முதலானோருக்கும் நெருக்கமாக இருந்தார். எனவே கோழிகூவுது முதலான படங்களிலும் சங்கிலிமுருகனின் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி, செந்தில் கோஷ்டியுடன் இவரும் இணைந்து நடித்திருப்பார். அந்த வாழைப்பழ காமெடி சீனிலும் வருவார். படத்தில், ஊருவிட்டு ஊரு வந்து பாடலில் இவரும் பாடி ஆடி நடித்திருப்பார்.

இப்படி பல படங்களில் நடித்து வந்த வெள்ளைசுப்பையாவுக்கு, பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதேவேளையில், கழுத்தில் கட்டி போன்று வரவே, பரிசோதனை செய்துகொண்டார். அதில், அவருக்கு கேன்ஸர் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

கடந்த ஆறேழு வருடங்களாகவே கேன்ஸருக்கு சிகிச்சைகள் எடுத்து வந்தார். 2014ம் வருடம், கோவை மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதிநாள் முகாமில், ‘பணமின்றி சிகிச்சை செய்யமுடியாமல் அவதிப்படுகிறேன். கேன்ஸர் நோய்க்கு சிகிச்சை பெறவேண்டும். நிதியுதவி தாருங்கள்’ என அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சிவாஜி, எம்ஜிஆர், கமல், ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த வெள்ளை சுப்பையா, பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்த வெள்ளை சுப்பையா, கடந்த வாரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, நேற்று (செப்டம்பர் 6ம் தேதி) இரவு காலமானார்.

கோவை மேட்டுபாளையம் சிவன்புரம் காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்த வெள்ளை சுப்பையாவுக்கு வயது 78. மனைவி சாவித்திரி. ஒரு மகள் இருக்கிறார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close