‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் அதன் கலை இயக்குநர் அகால மரணமடைந்ததை அடுத்து, படக்குழுவினர் அனைவருக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மேற்கொள்ள படத்தின் நாயகன் அஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வீரம் திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் ’விடாமுயற்சி’. மகிழ்திருமேனி இயக்கத்தில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அஜர்பைஜான் தேசத்தில் அப்படி நடைபெற்ற படப்பிடிப்பில், எதிர்பாரா விதமாக நேரிட்ட துயரம் அஜித் உட்பட படக்குழுவினர் அனைவரையும் உலுக்கி உள்ளது.
விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குநரான மிலன் எதிர்பாரா மாரடைப்பு காரணமாக படப்பிடிப்பு தளத்திலேயே உயிரிழந்தார். பிரபல கலை இயக்குநர் சாபு சிரிலின் உதவியாளராக அறிமுகமான மிலன், பல்வேறு முன்னணி கலைஞர்களுடன் இணைந்து 24 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். 'கலாப காதலன்' படத்தின் மூலம் கலை இயக்குநராக அறிமுகமான மிலன் 'பில்லா', 'ஏகன்', 'வேட்டைக்காரன்', 'வேலாயுதம்', 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'சாமி 2' உட்பட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும்120-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
திரைத்துறையில் திரைக்கு பின்னே உழைப்பவர்களின் முகமும், உழைப்பும் வெளியுலகம் அறியாதது. குறுகிய நேரத்தில் வெகுவான உழைப்பைக் கோரும் திரைத்துறை பணி, இந்த உழைப்பாளர்களின் உடல்நலத்திலும் பாதகம் சேர்ப்பதுண்டு. இதனை உணர்ந்தே உச்ச நட்சத்திரங்கள் தங்களது நடிப்பிலான திரைப்படங்களை வெற்றிகரமாக்கிய திரைக்கலைஞர்களுக்கு வெகுமானம் அளித்து மகிழ்வதுண்டு. அஜித் போன்றவர்கள் தம் கையால் உணவு சமைத்துப் பரிமாறியும் நன்றி தெரிவிப்பதுண்டு.
அப்படியான அஜித்தை கலை இயக்குநர் மிலன் மரணம் வெகுவாய் பாதித்துள்ளது. திரைக்கலைஞர்களின் உழைப்பு மற்றும் உடல்நல பாதிப்புகளை நன்குணர்ந்த அஜித், தற்போது அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். இதன்படி, விடாமுயற்சி படக்குழுவினர் அனைவருக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த மருத்துவ பரிசோதனை மூலம், படக்குழுவினரின் உடல் நல பாதிப்பு ஏதேனும் அடையாளம் காணப்பட்டால், அதன் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கவும், குணப்படுத்தவும் இயலும். குறிப்பாக மிலன் மாரடைப்பில் பலியானது போன்ற துயரங்கள் நேரிட வாய்ப்பிருக்காது. அஜித் உத்தரவை அடுத்து அனைவருக்குமான மருத்துவ பரிசோதனை ஏற்பாடுகளை படத் தயாரிப்பு நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.