'தலைவர் 170' படத்திற்காக அமிதாப்பை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். இந்த மகிழ்ச்சியை அவர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
'ஜெயிலர்', 'லால் சலாம்' படங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'தலைவர் 170' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஜெய்பீம்' புகழ் ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாபச்சன், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பல நடிகர்கள் நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு கேரளா, திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
பின்பு, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இடங்களில் நடந்தது. இந்த பகுதிகளில் ரசிகர்கள் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பல வருடங்களுக்கு பிறகு கன்னியாகுமரி வந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் நெகிழ்ச்சியாக பகிர்ந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. கிட்டத்தட்ட 33 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் அமிதாப் இணைந்து நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படபிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதில் அமிதாப்பச்சன்- ரஜினிகாந்த் போர்ஷன் படமாக்கப்பட்டு வருகிறது. ரஜினி, அமிதாப்புடன் இணைந்து எடுத்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, '33 வருடங்களுக்குப் பிறகு என்னுடைய மெண்டர், நலன் விரும்பி ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' படத்தில் நடிக்கிறேன். என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது' எனப் பகிர்ந்துள்ளார்.