‘பேய்க்கதை தொடரில் நடித்தது முதல் எனக்கும் பேய் பயம் வந்துவிட்டது’ என்று தெரிவித்திருக்கிறார், ‘மேன்ஷன் 24’ வலைத்தொடரின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார்.
அம்ரிதா ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளர். இவரது தந்தை காளிதாஸ். இந்திய தொல்லியல் அருங்காட்சியகத்தில் பணிபுரிந்து வந்த காளிதாஸ் மீது பெரும் களங்கம் விழுகிறது. நாட்டின் பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய புராதனப் பொருள் ஒன்றை திருடிக்கொண்டு தலைமறைவானதாக காளிதாஸ் மீது தேசத்துரோகி குற்றச்சாட்டு விழுகிறது.
தந்தையின் மீதான களங்கத்தை துடைக்கவும், துரோகியின் மகள் என்ற அவப்பெயரை நீக்கவும் அம்ரிதா முடிவு செய்கிறார். தந்தை காளிதாஸ் மறைந்திருப்பதாக அறியப்படும் பேய் மாளிகையை நெருங்குகிறார். பெர்முடா முக்கோணம் போல, அந்த மாளிகைக்குள் சென்றவர்கள் எவரும் உயிரோடு திரும்பியதில்லை என்ற பீதி நிலவுகிறது.
ஆனால் அம்ரிதா அந்த பேய் மாளிகைக்குள் துணிச்சலாக நுழைகிறார். அங்கே பேய்கள் இருந்தனவா, அவற்றின் பின்னணி என்ன, தந்தை காளிதாஸ் கிடைத்தாரா, அவர் மீதான திருட்டுப் பழியின் ரகசியம் என்ன என்பவை உள்ளிட்டவற்றை திகில் கதையாக விவரிக்கிறது மேன்ஷன் 24 வலைத்தொடர்.
டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் அக்.17 அன்று வெளியாகி இருக்கும் இந்த வலைத்தொடரின் முதல் சீஸன் 6 எபிசோடுகளை அடக்கி உள்ளது. ஹாரர் சஸ்பென்ஸ் வகையறாவை சேர்ந்த இந்த வலைத்தொடர், அதில் நடித்தவர்களையும் பேய் பயத்துக்கு ஆளாக்கியதாக, அதில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.
”தைரியமான பெண்ணான எனக்கும் பேய் பயம் வந்துவிட்டது. நான் நடித்திருந்த போதும் என்னால் அந்த தொடரை இரவில் பார்க்க முடியாது” என்று வரலட்சுமி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பத்திரிக்கையாளர் அம்ரிதாவாக வரலட்சுமி, அவரது தந்தையாக சத்யராஜ் நடிக்க உடன் பிந்துமாதவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம்கார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான இந்த வலைத்தொடரை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் தமிழிலும் பார்க்கலாம்.