நடிகர் விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு லஞ்சம் கேட்ட விவகாரத்தில் விஷாலின் உதவியாளர் அரிகிருஷ்ணன் மற்றும் லஞ்சம் வாங்கி கொடுத்த தரகர்களிடம் மும்பை சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் தொடர்பாக, நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.அதில். படத்தை தணிக்கை செய்வதற்காக மும்பையில் உள்ள தணிக்கை அதிகாரிகளுக்கு 6.5 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்பட்டதாக வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
அத்துடன் ஜுஜு ராமதாஸ் என்பவரது மும்பை கோடக் மகேந்திரா வங்கிக் கணக்கிற்கு இரு தவணைகளாக அந்த பணத்தை ராஜன் என்பவரது வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பி வைத்ததாக குற்றம்சாட்டி இருந்தார். மேலும், பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை குறிப்பிட்டு, இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் இறங்கினர். மும்பையில் நடிகர் விஷால் குற்றம் சாட்டிய தரகர்கள் மற்றும் சென்சார் போர்டு அதிகாரிகள் தொடர்பான நான்கு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
நடிகர் விஷால் குற்றம் சாட்டியது போல 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு 7 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பேரம் பேசி ஆறு லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு தரகர்கள் மூலமாக இரண்டு வங்கி கணக்குகளில் லஞ்சப்பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது.
லஞ்சம் கொடுத்த பிறகு கடந்த 26-ம் தேதி சென்சார் போர்டு சான்றிதழை வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தரகர்கள் மூலமாக இந்த சான்றிதழை பெறுவதற்கு 20,000 ரூபாய் கமிஷனும் பெண் தரகர் எடுத்துக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து மெர்லின் மேனகா, ஜுஜு ராமதாஸ், ராஜன் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக மும்பை சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஷாலின் உதவியாளர் அரிகிருஷ்ணனிடம் மும்பை அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு ஆரம்பித்த விசாரணை இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம் தரகர்கள் லஞ்சம் கேட்டது தொடர்பாக அணுகியிருக்கிற காரணத்தினால், சிபிஐ அதிகாரிகள் ஹரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தரகர்கள் எவ்வாறு அரிகிருஷ்ணனை அணுகினார்கள், லஞ்சப்பணம் எவ்வாறு கொடுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஜுஜு ராமதாஸ் மேனகா மற்றும் ராஜன் உள்ளிட்டோருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது, அதன் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் கிடைக்கப் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக லஞ்சம் பெற்ற சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்