குண்டு கண்களும் சிரிப்பு முகமுமாய் வலம் வரும் நடிகை ஜோதிகாவின் 44வது பிறந்தநாள் இன்று. தனது நடிப்புத் திறமையை பல வெற்றிப்படங்களில் நிரூபித்தவர் குறித்து சில சுவாரஸ்யத் தகவல்களை பார்க்கலாம் வாங்க...
*மும்பையைப் பூர்வீகமாக கொண்ட நடிகை ஜோதிகா, இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய படத்தில் தான் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் 'வாலி' படம் மூலமாக அஜித்துடன் அறிமுகமானார்.
* அவருடைய குண்டு கண்களுக்கும் துறுதுறு நடிப்புக்கும் நிறைய ரசிகர்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவருடைய நடிப்பு மிகை நடிப்பு என்று ஆரம்ப காலத்தில் கேலி செய்தவர்களும் இருந்தனர்.
* 'வாலி' படத்தின் ஏற்பட்ட நட்பு மூலம் எஸ்.ஜே.சூர்யா அவரை 'குஷி' படத்திலும் நடிக்க வைத்தார். இந்தப் படம் விஜய், ஜோதிகா, எஸ்.ஜே.சூர்யா என மூவரின் வாழ்விலும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த வெற்றிக்குப் பிறகு விஜயுடன் 'பிரண்ட்ஸ்' படத்தில் ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அவருக்குப் பதிலாக தேவையாணி வந்தார்.
*'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'காக்க காக்க', 'பேரழகன்' போன்ற பல படங்களில் தனது காதல் கணவர் சூர்யாவுடன் இணைந்து நடித்தார் ஜோதிகா. குறிப்பாக, 'காக்க காக்க' பட சமயத்தில் அவர்களது காதல் இன்னும் வலுப்பெற்றிருந்தது.
*சூர்யா-ஜோதிகா வாழ்க்கையில் மிக முக்கியமான நாள், அவர்களது கல்யாண நாள். அப்போதைய முதல்வர் கலைஞரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவும் கலந்து கொண்டனர். முன்னாள் மற்றும் இந்நாள் முதல்வர்கள் கலந்துகொண்ட அபூர்வமான நிகழ்ச்சிகளில் எங்களுடைய திருமணமும் ஒன்று என பெருமைக் கொண்டது இந்த ஜோடி.
*'சந்திரமுகி' படத்தில் முதலில் ஜோதிகா நடிப்பதாக இல்லை. அவருக்குப் பதிலாக சிம்ரன், சிநேகா தான் இயக்குநர் சாய்ஸில் இருந்தனர். பரதம் தெரியாது என்பதால் முதலில் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத் தேர்ந்தெடுக்க மறுத்துள்ளது படக்குழு. பின்பு அந்தக் கண்களுக்காகவும், பரதம் கற்றுக் கொண்ட முயற்சிக்காகவும் தேர்வானார் ஜோதிகா. இப்போது வரை அந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் அத்தனை சிறப்பாக செய்திருக்க முடியாது என்கிற அளவில் இருந்தது ஜோதிகாவின் நடிப்பு.
*திருமணம், குழந்தைகள் என சிறிய பிரேக் எடுத்தவர், '36 வயதினிலே' படம் மூலம் கம்பேக் கொடுத்தார். ஹீரோயின் செண்ட்ரிக் படங்கள், தயாரிப்பு, குழந்தைகள் என பிஸியாக வலம் வரும் ஜோவுக்கு காமதேனு வாசகர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!