லியோ படத்திற்கு அடுத்த சிக்கல்… அனுமதியின்றி பேனர் வைக்க தடை!


லியோ

லியோ படத்திற்கு அனுமதியின்றி பேனர் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதே நேரத்தில் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில், உள்துறை செயலாளர் அமுதாவை, லியோ திரைப்பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர்கள் சந்தித்து பேசி கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் லியோ படத்திற்கு அனுமதியின்றி பேனர் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், லியோ படத்திற்காக திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு திரையரங்குகள் முன்பு மிக உயரமான பேனர்கள், கட் அவுடுகள், பேனர்களை வைத்துள்ளனர்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக ஒலிகளை எழுப்பும் பட்டாசுக்களை வெடிக்கவும் திட்டமிட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. திரையரங்குகள் முன்பு பேனர்கள் வைக்க எந்த அனுமதியும் தரவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி வழக்கறிஞரை அழைத்து நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.

அப்போது, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டு விட்டதாக திண்டுக்கல் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், `அனுமதியின்றி லியோ படத்தின் பேனர்களை வைக்க கூடாது’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

x