[X] Close

எம்ஜிஆருக்கு பாராட்டுவிழா; கலைஞரை கூப்பிட்டோம்! - பாரதிராஜா 


kalaingar-bharathiraajaa

கலைஞர் கருணாநிதி

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Aug, 2018 19:46 pm
  • அ+ அ-

எம்ஜிஆருக்குப் பாராட்டுவிழா எடுத்தோம். அந்த விழாவுக்கு கலைஞரை அழைக்கப் போனோம். அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார்.


கோவையில், மறக்க முடியுமா கலைஞரை எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். 
விழாவில், இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது: 

கலைஞரோட வசனமும் சிவாஜியோட வசன உச்சரிப்பும் இல்லேன்னா, இன்னிக்கி இந்த மேடைல நான் இல்ல. இப்படி பாரதிராஜாவா உங்க முன்னாடி நின்னுட்டிருக்கும்படி வளர்ந்திருக்கவே மாட்டேன். 


தமிழ் சினிமாவை, சினிமாவின் வரலாறை கலைஞர் இல்லாமலும் சிவாஜி இல்லாமலும் எழுதவே முடியாது. கலைஞர், தமிழில் இரண்டறக்கலந்தவர். உலகத்துத் தமிழர்களிடமெல்லாம் இரண்டறக் கலந்திருப்பவர். மொழி காத்தவர். இனம் காத்தவர். கோடானுகோடி மக்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர். 


முதன்முதல்ல, கலைஞரைப் பாக்கப் போனது எப்ப தெரியுமா? எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் கிடைச்சதுக்கு ஒரு விழா எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம். விழா பத்தி எல்லாத் திட்டங்களும் போட்ட பிறகு, ஒரு நெருடல். விழாவுக்கு கலைஞரை அழைப்போமா அப்படின்னு ஒரு யோசனை. ஏவி.எம்.சரவணன் சார், நான், கோவை செழியன் இன்னும் சிலபேர்னு கோபாலபுரம் போனோம். 


மாடியேறி உள்ளே நுழைஞ்சதும், ‘வாங்கய்யா வாங்கய்யா’னு எல்லாரையும் கூப்பிட்டாரு. ‘வாய்யா பாரதி. இங்கே வந்து உக்காரு’ன்னு சொன்னாரு. முதல் சந்திப்பு. ஆனாலும் பாரதின்னு கலைஞர் கூப்பிட்டதுல ஒரு பிரியமும் அன்பும் வாஞ்சையும் தெரிஞ்சிச்சு. எத்தனையோ மேடைல அவர் பேசுறது சின்னப்பையனா இருக்கும்போதே கேட்டிருக்கேன். அவரைப் பாத்துருக்கேன். அதுதான் முதன்முதலான நேருக்குநேரான சந்திப்பு. 


விழா பத்தி சொன்னோம். ‘வந்துட்டாப் போச்சு’ என்றார். எங்களுக்கெல்லாம் உற்சாகம் தாங்கமுடியல. அடுத்த நிமிஷம் கலைஞர், ‘அப்படி வந்துட்டேன்னு வையுங்க. என்ன செய்வீங்க? எப்படி எல்லாத்தையும் சமாளிப்பீங்க? விழா நல்லபடியா நடக்கட்டும். என்னோட வாழ்த்துகள்’னு சொன்னார். எல்லாருமே நெகிழ்ந்து போயிட்டோம். 


‘சரி கிளம்பறோம்’னு எல்லாரும் எழுந்து போகும் போது, ‘பாரதி, இங்கே வாய்யா’ன்னு என்னைக் கூப்பிட்டார். எல்லாரும் கீழே இறங்கிட்டாங்க. நான் அவர்கிட்டபோனேன். என் கையைப் பிடிச்சி, கோத்துகிட்டார். ‘உன் படமெல்லாம் பாக்கறேன். ரொம்பச் சிறப்பா, சமூகத்துக்குத் தேவையான கருத்துகளையெல்லாம் அழகாவும் தைரியமாவும் சொல்றே. பாரதி... நிறையப் பண்ணுய்யா. நீ இங்கே இருக்கே...’ என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டினார். அவர்தான் கலைஞர். அதுதான் அவரின் மனசு. கலையின் ரசிகன் அவர். சினிமாவின் காதலன் கலைஞர். 


அவர்கிட்ட வாழ்த்து வாங்கியதும், அவர் மனசுல இடம் பிடிச்சதும் வாழ்வின் மறக்கமுடியாத தருணங்கள்.
இவ்வாறு பாரதிராஜா பேசினார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close