HBD CRAZY MOHAN | எழுத்தின் வழி சிரிப்பை சாத்தியப்படுத்திய கலைஞன்!


கிரேஸி மோகன்...

'காமெடி ஒரு சீரியஸான பிசினஸ்' எனச் சொல்வார்கள். அப்படியான நகைச்சுவையை தன் எழுத்தின் வழியாகவும், நடிப்பின் மூலமும் சாத்தியப்படுத்திய கலைஞன் கிரேஸி மோகன். அவரின் 71வது பிறந்தநாளான இன்று, அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

* எஸ். வி சேகர் நடித்த 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' என்ற நாடகத்தை எழுதியதன் பிறகே 'கிரேஸி' என்ற அடை மொழியுடன் கிரேஸி மோகன் என அழைக்கப்பட்டார்.

* கிரேஸி முதலில் நடித்த மேடை நாடகம் 'வீரபாண்டிய கட்டபொம்மன்'.

கிரேஸி மோகன்...

* கிரேஸி மோகனுக்குத் தமிழில் மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் சாவி, மௌலி மற்றும் சோ. அதேபோல் ப்ரிட்டிஷ் எழுத்தாளரான பி.ஜி.வோட்ஹவுஸ் என்பவரும் கிரேஸிக்கு மிகவும் பிடித்தமானவர்.

*தமிழ் சினிமாவில் அது வரை காமெடிக்கு என்று தனி டிராக் இருந்தது. அதை கூடுமானவரை தவிர்த்து தனித்துத் தெரிய வேண்டும் என கிரேஸி மோகன் - கமல்ஹாசன் கூட்டணி ஒன்றிணைந்து கொடுத்தப் படங்கள் ஏராளம்.

'அபூர்வ சகோதரர்கள்', 'பம்மல் கே. சம்மந்தம்', 'வசூல்ராஜா', 'அவ்வை சண்முகி' போன்ற சில கிளாசிக் படங்களைக் குறிப்பிடலாம்.

கிரேஸி மோகன்...

* கிரேஸி மோகனின் வசனங்களில் அதிகளவு நடித்தவர் கமல்ஹாசன். கிரேஸியின் மழலை மாறாத மனசு மீது எனக்கு எப்போதும் பொறாமை என்பார் கமல். அதேபோல சாருஹாசன், சந்திரஹாசன் வரிசையில் மோகன் ஹாசன் என பெயர் வைத்துக் கொள்ளலாம் என கமலிடம் கிரேஸி மோகன் உரிமையாகச் சொல்வார்.

*கிரேஸியின் பக்கத்து வீட்டிலிருக்கும் ஒரு மாமிதான் இவருக்கு நாடகம் செல்லும் காலங்களில் மேக்கப் போட்டுவிட்டார். அவரது பெயர் ஜானகி. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே, தான் பணியாற்றும் படங்களில் சம்பளம் பேசும் முன் ஜானகி என்ற பெயர் படத்தில் ஏதாவதொரு கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பார்.

காலம் கடந்தும் தன் வசனங்கள் மூலமும் நகைச்சுவை மூலமும் நம்முடன் சிரித்து வாழும் கிரேஸிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

x