[X] Close

கோலிவுட்டில் (மீண்டும்) ரீமேக் மழை


remakes-in-tamil-cinema

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 13 Aug, 2018 14:12 pm
  • அ+ அ-

தமிழ் சினிமாவில் மீண்டும் ரீமேக் சீஸன் தொடங்கிவிட்டது போல. கடந்த வாரம் தான் 'பலே பலே மஹாடிவோய்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'கஜினிகாந்த்' வெளியானது. அடுத்த மூன்று மாதங்களில் இன்னும் பல ரீமேக் படங்கள் திரைக்கு வரவுள்ளன.

ஆகஸ்ட் 31-ஆம் தேதி, ராதாமோகன் இயக்கி, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு நடித்திருக்கும் '60 வயது, மாநிறம்' வெளியாகிறது. இது 'கொத்தி பன்னா, சாதரண மைகட்டு' என்ற கன்னட படத்தின் ரீமேக்.

செப்டம்பர் 13, கன்னடத்தில் ஹிட்டான 'யூ-டர்ன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பதிப்புகள், சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ளன. 

அக்டோபர் 18, இந்தியில் வித்யாபாலன் நடித்த 'தும்ஹாரி' சூலு படத்தின் தமிழ் ரீமேக்கான 'காற்றின் மொழி' வெளியாகவுள்ளது. தமிழில் ஜோதிகா நடிக்க, ராதா மோகன் இயக்கியுள்ளார்.

நவம்பர்ம் மாதம், 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக், 'வர்மா' வெளியாகவுள்ளது. பாலா இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் படம் இது. 

தமிழில் இன்னும் ரீமேக் படங்களுக்கு மவுசு இருக்கிறதா?

60-களின் ஆரம்பத்தில் இருந்து, சமீப காலம் வரை, மற்ற மாநில மொழிகளில் வெற்றி பெற்ற படங்களுக்கு தமிழில் நல்ல சந்தை இருந்தது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்கள் பலரும் பல ரீமேக் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர்கள் தான். விஜய்யின் 'ஃபிரெண்ட்ஸ்', 'கில்லி', 'போக்கிரி' உள்ளிட்ட படங்களும் ரீமேக் தான். அவரது மாஸ் ஹீரோ இமேஜை கட்டமைக்க இவை பெரும் உதவி புரிந்தன. 

'ஜெயம்' சகோதரர்கள் ரவி மற்றும் மோகன்ராஜா இருவரும் இணைந்து தொடர்ந்து ரீமேக் படங்களை தமிழில் ஹிட்டாக்கியுள்ளனர். 

ஆனால் நடுவில் சில காலம் தமிழில் ரீமேக் படங்கள் பெரிதாக வரவில்லை. இளம் இயக்குநர்கள் பலரும், நம் மாநிலம் சார்ந்த, அசல் கதைகளையே விரும்பினார்கள். தமிழ் நாட்டை தாண்டிய மற்ற மாநிலங்களில் வியாபாரம் பாதிக்கப்படுவதால், பெரிய நடிகர்களும் ரீமேக்கை தவிர்த்து வந்தனர். கடைசியாக பெரிய நடிகர் ஒருவர் நடித்து ஹிட்டான ரீமேக் படம், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'பாபநாசம்'. இது மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வந்த 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக். 

இன்றைய பெரிய தமிழ் நாயகர்கள் ரீமேக்கில் நடிக்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்களது தெலுங்கு மற்றும் இந்தி சாட்டிலைட் வியாபாரம் பாதிக்கப்படுவதாலேயே இந்த முடிவு. இதனால் சின்ன நட்சத்திரங்கள் ரீமேக் படங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். தற்போதைய சூழலில் பட்ஜெட் ஒரு படத்தின் முக்கியமான அங்கம்.

ரீமேக் படங்கள் எடுக்கும்போது முதலீடு பாதுகாப்பாக இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அதற்கான நிரூபணமும் இருக்கிறது. இதனால் தான் நேரடி படங்களை விட ரீமேக் படங்களின் படப்பிடிப்பு நாட்கள் குறைவாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் முடிந்துவிட்டது. இது தயாரிப்பாளருக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்தியிருக்கும். 

படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜயம் பேசுகையில், "இன்று மிகப்பெரிய சவாலே ஒரு படத்துக்கான சரியான ஸ்க்ரிப்ட் இருப்பதுதான். ரீமேக் என்று வரும்போது அது ஏற்கனவே வெற்றி பெற்று நிரூபித்த படம். அதன் ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் ரசிகர்களை அது உணர்வுரீதியாக சென்றடையும் விதத்தை வைத்து அதன் வெற்றி தீர்மானமாகும். காற்றின் மொழி படத்தைப் பொருத்த வரை, 'மொழி' படத்துக்குப் பிறகு, 9 வருடங்கள் கழித்து ராதா மோகனும், ஜோதிகாவும் இணைந்துள்ளார்கள். இது நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் இதில் சிலம்பரசனின் கவுரவத் தோற்றம், புகழ்பெற்ற 'ஜிம்மிக்கி கம்மல்' பாடல் பயன்படுத்தியிருப்பது என ரசிகர்களை ஈர்க்க மற்ற விஷயங்களும் உள்ளன” என்றார். 

ரீமேக் உரிமை ரூ. 30 லட்சத்திலிருந்து 75 லட்சம் வரை விற்பனையாகிறது. எந்த மொழியிலிருந்து வாங்கப்படுகிறது என்பதைப் பொருத்து இந்த விலை மாறும். மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படங்களுக்கான வரவேற்பு சமீப காலமாகக் குறைந்துள்ளது. தெலுங்கு மற்றும் கன்னட ரீமேக் தான் தற்போது விருப்பத் தேர்வாக இருக்கிறது. 

'தும்ஹாரி சூலு' ரீமேக் உரிமை (தெலுங்கு டப்பிங் உட்பட) ரூ. 60-75 லட்சத்துக்கு வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சமீப காலத்தில் மிக அதிகமாக விலை கொடுத்து வாங்கப்பட்ட ரீமேக் உரிமை 'அர்ஜுன் ரெட்டி' படத்தினுடையது என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமை ரூ. 1.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது 'ஆர்.எக்ஸ் 100' மற்றும் 'கூடாச்சாரி' ஆகிய சமீபத்திய தெலுங்கு ஹிட் படங்களின் ரீமேக் உரிமைக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

'60 வயது மாநிறம்' படத்தின் தயாரிப்பாளர்  கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், "மனிதம் என்ற அம்சம் தான் ரீமேக் படங்களில் முக்கியமானது. இந்த ரீமேக் கண்டிப்பாக ரசிகர்களைத் தொடும். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, காணாமல் போன ஒரு வயதான அப்பாவைத் (பிரகாஷ் ராஜ்) தேடும் மகனின் (விக்ரம் பிரபு) கதை இது".

'வர்மா' படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், "துருவின் முதல் படமாக அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். தெலுங்கில் படத்தின் வெற்றிக்கு 50 சதவிதம் விஜய் தேவர்கொண்டா காரணம். மீதி 50 சதவிதம் படத்தின் கதை காரணம். வர்மாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் சாரம் இருக்கும். தமிழில் இன்னும் கூடுதல் நகைச்சுவையுடன் படம் இருக்கும். படத்தின் மொத்த நீளமும் 20 நிமிடங்கள் குறைவாக இருக்கும். ஒரு ரீமேக் படத்தின் வெற்றிக்கு அதன் நடிகர்கள் தேர்வு ஒரு முக்கியமான காரணம் என நம்புகிறேன். வர்மா, இயக்குநர் பாலாவின் கைகளில், துருவ்-க்கு கச்சிதமான முதல் படமாக இருக்கும். விக்ரமை வைத்து 'சேது' என்ற மறக்கமுடியாத படத்தைக் கொடுத்தவர் அல்லவா அவர்" என்றார்.

வெளியாகவுள்ள இந்த ரீமேக் படங்களின் வெற்றியே கோலிவுட்டில் தொடரப்போகும் ரீமேக் ட்ரெண்டின் விதியைத் தீர்மானிக்கும். 

- ஸ்ரீதர் பிள்ளை, தி இந்து ஆங்கிலம் | தமிழில் கார்த்திக் கிருஷ்ணா

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close