[X] Close

மயிலு மயிலுதான்..!


mayilu-sridevi

நடிகை ஸ்ரீதேவி

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Aug, 2018 13:23 pm
  • அ+ அ-

ஒரு சாதாரணக் கிராமத்தில் இருந்து வந்து, பிறகு இந்தியாவுக்கே தேவதை எனப் போற்றப்படுவதெல்லாம் சாதாரணமானது அல்ல. அப்படிப் பேரெடுப்பவர்களுக்குப் பின்னே அசாத்தியங்கள் என்று அழகோ திறமையோ இரண்டுமோ கைகோர்த்திருக்கும். அப்படி கைகோர்த்திருந்தால்தான் தேவதை எனும் பட்டம் பெறமுடியும். அப்படியொரு கனவு தேவதைப் பட்டத்துக்குச் சொந்தக்காரர்தான் ஸ்ரீதேவி.

விருதுநகருக்குப் பக்கத்தில் உள்ள தீப்பெட்டி சைஸ் கிராமம்தான் ஸ்ரீதேவிக்கு சொந்த ஊர். அங்கிருந்து சென்னைக்கு வந்து, சென்னையில் இருந்து கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தது முருகனருள் என்று சொல்லுவார்கள் அப்போது. தேவரின் துணைவன் படத்தில், முருகப்பெருமானின் கேரக்டரில் அழகு ஜாலம் காட்டி, குழந்தை நட்சத்திரமாக ஜொலித்ததுதான் ஸ்ரீதேவியின் ஆரம்பம.

பிறகு, சிறுமியாகவே எம்.ஜி.ஆருடனும் சிவாஜியுடனும் நடித்தவருக்கு, இயக்குநர் சிகரம் குமரியானதும் தந்த வாய்ப்புதான் மூன்று முடிச்சு. காதலித்தவன் இறந்துவிட, அபகரிக்க நினைப்பவன் டார்ச்சர் கொடுக்க, அப்படி டார்ச்சர் கொடுத்தவனின் தந்தைக்கு மனைவியாகி, அவனுக்கு சித்தியாகி டார்ச்சர் கொடுப்பதுதான் மூன்று முடிச்சு.

நாயகியான படமே, ’நாயகி’ எனும் அந்தஸ்துக்கு உரிய படமாக அமைந்தது ஒருபக்கம், முதல்படமே இப்படி எகணைமொகணையாக இருப்பது இன்னொரு பக்கம். ஆனாலும் ஸ்ரீதேவி எல்லோராலும் கவனிக்கப்பட்டார். பெரிய ஆளாக வருவார் என கணிக்கப்பட்டார்.

பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீதேவியை, பாரதிராஜா அழைத்து வந்து மகுடம் சூட்டினார். மயிலாக்கினார். அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவியின் மயிலாட்டமும்பாட்டமும் தொடங்கியது.

கமலுடன் நடிப்பார். பிரமாதமான ஜோடி என்றார்கள். ரஜினியுடனும் நடிப்பார். சூப்பர் ஜோடி என்றார்கள். ஜெய்சங்கருடன் ஜோடி சேருவார். விஜயகுமாருடன் சேர்ந்து நடிப்பார். சிவகுமாருடன், நடிப்பார். ஸ்ரீதேவிக்கு எப்போதுமே உடன் நடிக்கும் நடிகர்கள் யார் என்பதெல்லாம் முக்கியமே இல்லை. கொடுக்கும் கேரக்டர் என்ன என்றே பார்ப்பார். அதனால்தான் சிகப்பு ரோஜாக்கள், கல்யாணராமன், வறுமையின் நிறம் சிகப்பு, தாயில்லாமல் நானில்லை, மனிதரில் இத்தனை நிறங்களா, நீலமலர்கள், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை   என்று கமலுடன் நடித்த படங்களில் அவரின் அபரிமிதமான நடிப்புச் சிறப்பைப் பார்க்கலாம்.

அதேபோல், காயத்ரி, கவிக்குயில், தர்மயுத்தம், அடுத்த வாரிசு, தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை, ஜானி, போக்கிரி ராஜா என்று ரஜினியுடன் நடித்த படங்களில், தனியொருமுத்திரையைப் பதித்து, தேர்ந்த நடிப்பை வழங்கியிருப்பார்.

இன்னொரு பக்கம் பார்த்தால், பகலில் ஓர் இரவு மாதிரியான படங்களிலும் கலக்கியெடுத்திருப்பார் ஸ்ரீதேவி.

அவரின் ஒவ்வொரு படம் வரும் போதும் ஸ்ரீதேவியின் எல்லைகள் விரிந்துகொண்டே போனது என்றுதான் சொல்லவேண்டும். தெலுங்கில் நடித்தார். ஹிட்டானார். மலையாளப் படங்களில் நடித்தார். அங்கேயும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டார். அதன் பிறகு, இந்திப்படவுலகிலும் நுழைந்தார். அங்கே சிகப்புக்கம்பளம் விரித்தார்கள். பூக்கள் தூவினார்கள். ‘ஸ்ரீதேவியின் கால்ஷீட் கிடைச்சாச்சுன்னா, படம் ஹிட்டு’ என்று நம்பிக்கை கொண்டார்கள். ‘எவ்ளோ சம்பளம் கேட்டாலும் பரவாயில்லை’ என்றார்கள். நடித்த படங்களெல்லாம் அவருக்கு முக்கியத்துவம் தருகிற பாடங்களாகவே அமைந்தன.

இந்தியாவின் கனவுக்கன்னி என்று ஹேமமாலினியைச் சொல்லி வந்தவர்கள், அப்படியே ஸ்ரீதேவிப் பக்கம் தாவினார்கள். கனவுக்கன்னி என்று கொண்டாடினார்கள். தேவதை என்று புகழ்ந்தார்கள்.

‘எல்லோரும் என்னை தேவதைங்கறாங்க. கனவுக்கன்னின்னு சொல்லுறாங்க. இதை எல்லாத்தையும் விட சிறப்பானதுன்னு நான் நினைக்கிறது... மக்கள் தங்களோட மனசுல எனக்கு ஒரு இடம் கொடுத்திருக்காங்களே... அதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்’ என்று சொல்லி நெகிழ்ந்த மனசுதான், ஸ்ரீதேவியின் குழந்தை உள்ளம்!

காலம், ஒரு சிறிதான காற்றில் கூட அடுக்கியவற்றைச் சிதைத்துப் போடலாம் என்பதே இயற்கையின் விதி. இங்கே விதி சதி செய்ய, வெளிநாட்டுக்குச் சென்ற போது, ஸ்ரீதேவிக்கு நிகழ்ந்த மரணத்தை எவராலும் நம்பவே முடியவில்லை.

ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். நிஜத்தை நம்பாதிருக்க முடியாதே! ஸ்ரீதேவியின் மரணம் உறுதி என்றதை அறிந்ததும் கண்ணீர் விட்டுக் கதறினார்கள் ரசிகர்கள். ஏனெனில் ஸ்ரீதேவியை நடிகையாக மட்டுமே பார்க்கவில்லை. தங்கள் வீட்டுப் பெண்ணாகவே நினைத்து நெஞ்சத்துக்கு நெருக்கமாக்கிக் கொண்டாடியவர்கள், மரணச் செய்தியால் நிலைகுலைந்து போனார்கள்.

அந்த அழகு தேவதைக்கு, இந்தியாவின் கனவுக்கன்னிக்கு, நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று பிறந்தநாள் (13.8.18).

அவர் ஸ்ரீதேவியாக இருந்தாலும் குயினாக இருந்தாலும் ஏஞ்சலாக இருந்தாலும் ரசிகர்களுக்கு எப்பவுமே அவர் மயிலுதான்! ஆமாம்... மயிலுமயிலுதான்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close