[X] Close

ஒரே வருடத்தில் 42 கிலோ எடை குறைத்தேன்: இசையமைப்பாளர் இமான் நம்பிக்கைப் பதிவு


imaan-weight-loss-post

  • kamadenu
  • Posted: 13 Aug, 2018 12:31 pm
  • அ+ அ-

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். வருடா வருடம் பல ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரர். தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் 'விசுவாசம்' படத்துக்கு இவர் தான் இசை. 

சில வருடங்களுக்கு முன் பார்க்க சற்று பருமனாக இருந்த இமான் அதிரடியாக தனது எடையைக் குறைத்தார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடி, பகிர்ந்து வரும் இமான், தனது சமீபத்திய புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

இது பலரை ஆச்சரியப்படுத்தவே, அவரது இந்த உருமாற்றம் எப்படி சாத்தியமானது என்று அவரை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து, தனது எடை குறைப்பு பற்றி இமான் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதன் தமிழாக்கம் பின்வருமாறு...

முடியாதது எதுவுமில்லை!

கடந்த சில நாட்களாகவே என்னைப் பார்ப்பவர்கள் நான் இப்போது பார்க்க ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இதற்குப் பின் மிகப்பெரிய கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் உள்ளது. ஆரோக்கியமாக இருப்பதும் ஃபிட்டாக (fit) உணர்வதும் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய ஒன்று. 

சிறு வயதிலிருந்தே எனது உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் பள்ளிப்படிப்போடு, வேலை அழுத்தமும் சேர்ந்துகொண்டது (கீபோர்ட் இசைக்கலைஞனாக எனது பள்ளிப் பருவத்திலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன்). மணிக்கணக்கில் ஒலிப்பதிவு வேலைகள், பிறகு காலை வேளையில் பள்ளி என இருந்ததால் எனது உடல் பருமன் அதிகமானது. 

நாட்கள் செல்ல செல்ல, எனது உடல், ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு பழக்கமானது. ஸ்டூடியோவில் பல மணி நேரம் எங்கும் நகராமல் உட்கார்ந்து வேலை செய்தது எனது பருமனை மேலும் அதிகரிக்க வைத்தது. ஆனால், ஆரோக்கியத்தில் கவனமிருப்பவன் என்பதால் ஒருவழியாக தினசரி உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கு, அதற்கு ஏதுவான சரியான உணவு முறையையும் பின்பற்றினேன். இதனால் ஒரே வருடத்தில் 42 கிலோ எடை வரை குறைந்தது. 

117 கிலோ எடையோடு இருந்த நான் 75 கிலோவாகக் குறைந்தேன். பல முறை நான் இதைக் கூறியுள்ளேன் ஆனால் மீண்டும் மீண்டும் இதைப் பற்றிக் கேட்பதால் தெளிவுபடுத்துகிறேன். நான் இயற்கை முறையில் தான் எடை குறைத்துள்ளேன். செயற்கையாக எதையும் செய்யவில்லை நண்பர்களே.

ஆரோக்கியமற்ற முறைகளில் எடை குறைப்புக்கு மறுப்பு கூறுங்கள். கூடுதலாக நேரமெடுத்தாலும் இயற்கை முறையில் எடை இழப்பதே சிறந்தது. எனது டயட்டீஷியன் திருமதி அதுல்யா ராஜேஷுக்கும், எனது பயிற்சியாளர் திரு. ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி. அவர்களது பயிற்சி மையத்தின் மூலம் என்னைக் கண்காணித்து, வழிகாட்டினார்கள். 

உங்கள் அன்பை எப்போதும் போல பகிருங்கள். பருமனோ, ஒல்லியோ, இசையால் நான் உங்களுக்கானவன். என்றும் அன்பையே பரப்புங்கள். 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close