[X] Close

நண்பன் கதை... சினிமாவில் தனி மவுசு!


nanban-story-cinema

தளபதி - மம்முட்டி, ரஜினி

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Aug, 2018 11:48 am
  • அ+ அ-

பயன்படுத்திக்கொள்வதற்காகப் பழகாதவர்களே நண்பர்கள். ஆனால் ஓர் ஆச்சரியம்... சினிமாவில் நண்பர்கள் எனும் கான்செப்ட்டை மிக நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார்கள்.

நட்பு என்பதும் நண்பர்கள் என்பவர்களையும் கொண்டு ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. எல்லா காலத்திலும் நட்பு உண்டு. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேயே நண்பர்கள் பற்றிய கதைகள் உண்டு.

பாசமலரில் நண்பர்களாக இருக்கும் சிவாஜியும் ஜெமினியும்தான் பிறகு சாவித்திரியை ஜெமினி கல்யாணம் செய்துகொண்டு உறவாகிவிடுவார்கள்.

பார்த்தால் பசி தீரும் படத்தில், சிவாஜியும் ஜெமினியும் நண்பர்கள். ராணுவத்தில் பணிபுரிவார்கள். வடக்கே, சாவித்திரியைப் பார்த்ததும் காதல்கொள்வார் ஜெமினி. ஆனால் அடுத்தடுத்த சூழல்களால், ஜெமினி செளகார்ஜானகியைத் திருமணம் செய்துகொள்வார். நடுவில் பார்வையை இழந்த சாவித்திரியையும் அவரின் மகனான சிறுவன் கமல்ஹாசனையும் அரவணைத்துக் காப்பார் சிவாஜி. தன் நண்பனுக்காக, பழியையும் அவச்சொல்லையும் தாங்கிக்கொள்வார்.

உயர்ந்த மனிதன் படத்தில், சிவாஜிக்கு அசோகன் நல்ல நண்பர். அதேபோல மேஜர் சுந்தர்ராஜனும் இனிய நண்பர். சிவாஜியின் அந்தரங்க விஷயம் அசோகனுக்குத் தெரிந்திருக்கும். மேஜருடன் ‘அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே... நண்பனே...’ என்று பாடி மகிழ்வார் சிவாஜி.

ஞான ஒளி படம் இன்னும் அடுத்தக்கட்டம். சிவாஜியும் மேஜரும் சிறுவயது நண்பர்கள். சிவாஜி மாதாக்கோயிலில் மணியடிப்பவர். மேஜர் போலீஸ். ஒருகட்டத்தில் மகளைக் கெடுத்தவனைக் கொன்றுவிடுவார். சிறையில் இருப்பார். பிறகு தப்பித்துவிடுவார். பல வருடங்கள் கழித்து, வேறொரு தோரணையில், வேறொரு பெயருடன் சொந்த ஊருக்கு வருவார். சிவாஜியைப் பிடிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் மேஜர், ஒருகட்டத்தில், சிவாஜியின் மகள் சாரதாவை எல்லோருக்கு முன்பும் அவதூறாகப் பேசுவார். கொதித்தெழுந்த சிவாஜி உண்மையையெல்லாம் சொல்லுவார். அப்போது, ‘என் மகள் நடத்தை கெட்டவ இல்லதானே. சொல்லு லாரன்ஸ். நான் உன் நண்பனில்லையா... சொல்லு’ என்று சிவாஜி சொல்ல, கரைந்து போனார்கள் ரசிகர்கள்.

ஆலயமணியில் சிவாஜியும் எஸ்.எஸ்.ஆரும் நண்பர்கள். எஸ்.எஸ்.ஆரும் சரோஜாதேவியும் காதலிப்பார்கள். ஆனால், சிவாஜி விரும்புவார். காதலை விட்டுக்கொடுப்பார் எஸ்.எஸ்.ஆர். இப்படி, காதலை, நட்புக்காக, நண்பனுக்காக, தியாகம் பண்ணிய கதையை இன்றைக்கு எடுத்தால், ஸ்டேட்டஸ் போட்டே படத்தைக் காலி செய்துவிடுவார்கள் இப்போதைய இளைஞர்கள். தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்று கீழே போட்டு எச்சரிக்கவும் செய்ய... படம் அம்பேல்தான்!

சினிமாவில் நட்பை வைத்து கதை பண்ணும்போது வசமாக மாட்டிக்கொண்டார்கள், படைப்பாளிகள். இரண்டு நண்பர்கள். இருவருமே ஒரு பெண்ணைக் காதலிக்கிறார்கள். அந்தக் காதலால், நட்பு உடைகிறது. விரிசலடைகிறது. சுக்குநூறாகிறது. கடைசியில், இருவருக்குமான பொதுவில்லன் அழிக்கப் பார்க்கிறான். அதை உணர்ந்து, இருவரும் கைக்கோர்க்கிறார்கள். நட்பு மீண்டும் மலர்கிறது. வில்லனை ஒழிக்கிறார்கள். நண்பர்கள் சேருகிறார்கள் என்று மாற்றிமாற்றி, தோசையைத் திருப்பிப்போடுவது போல் உல்டாபுல்டா பண்ணி கதைபண்ணிக்கொண்டே இருந்தார்கள்.

சர்வர் சுந்தரம் படத்தில் முத்துராமனும் நாகேஷும் நண்பர்கள். முத்துராமனும் கே.ஆர்.விஜயாவும் காதலிப்பார்கள். ஆனால் சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறார் என்று நாகேஷ் தன்னைக் காதலிப்பதாக எடுத்துக்கொள்வார். நாகேஷிற்கு சினிமா வாய்ப்பு வந்திருக்கும் இந்த வேளையில், உண்மையைச் சொன்னால், நொறுங்கிப் போய்விடுவான். எதிர்காலமே சூன்யமாகிவிடும் என யோசித்து இருவருமே நாகேஷிடம் உண்மையைச் சொல்லாமல் மறைப்பார்கள். பிறகு தெரியவரும் போது டேக் இட் ஈஸி என்று தேற்றிக்கொள்வார் நாகேஷ்.

ஹிந்தியில் ஹிட்டடித்த தோஸ்த்தானா படம் ரீமேக் செய்யப்பட்ட போது, கமலும் சரத்பாபுவும் நடித்தார்கள். சட்டம் என்று படத்தின் பெயர். ஒருகட்டத்தில் பிரிவார்கள். மோதிக்கொள்வார்கள். இந்த கான்செப்ட், அண்ணாமலை ரஜினி, சரத்பாபு என்று நீண்டது. நடுவே ஒரு படத்தில், சரத்குமாரும் ரகுவரனும் நண்பர்களாக நடித்த படம் தோஸ்த் என்ற பெயரில் வந்தது.

சலங்கை ஒலியில் கமலும் சரத்பாபுவும் நண்பர்கள். ஒருகட்டத்தில் சரத்பாபுவின் மனைவியை அண்ணி என்று அழைத்து, அம்மாவாகவே பார்ப்பார் கமல். இறுதியில் வீல்சேரில் இறந்துவிட்ட கமலின் உடல், மழையில் நனையாமல் காப்பார் நண்பர் சரத்பாபு.

ரங்கா எனும் படத்தில் ரஜினியும் கராத்தே மணியும் நட்பாவார்கள். ரஜினி நல்லவர்; கராத்தே மணி கெட்டவர். அன்றிரவு இருவரும் பேசிக்கொள்வார்கள். விடிந்ததும் பார்த்தால், கெட்ட கராத்தே மணி நல்லவராகிவிடுவார். நல்ல ரஜினி கெட்டவராகிவிடுவார். சில சமயம் கூடாநட்புகளும் திரையில் காட்டப்பட்டிருக்கிறது.

கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஷ், பாக்யராஜ் நண்பர்கள். ஒரு சூழலில், ராஜேஷின் மனைவியை பாக்யராஜ் மிரட்டி மிரட்டி உடலுறவுக்கு அழைப்பார். தொந்தரவு பண்ணுவார். கடைசியில் பாக்யராஜை, கிணற்றில் தள்ளிவிட்டுக் கொல்வார் வடிவுக்கரசி.

ஒருதலைராகம் நண்பர்கள் கூட்டத்தையும் பாலைவனச்சோலையின் நண்பர்களையும் மறக்கவே முடியாது. இந்தப் படத்தின் இரட்டை இயக்குநர்கள் ராபர்ட் ராஜசேகரன், பல வருடங்கள் கழித்து, பறவைகள் பலவிதம் என்றொரு படம் பண்ணினார். கல்லூரி நண்பர்கள், கடைசி நாளில், நாம் எல்லோரும் நாம் நினைத்தபடி சாதித்து ஒருநாள் சந்திக்கவேண்டும் என்பார்கள். ஆனால் நினைத்ததற்கு மாறாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சந்திக்கவே கூசிப்போவார்கள். இப்போதைய த்ரி இடியட்ஸும் நண்பனும் கூட நட்புப் பட்டியலில் வந்துவிடுகிறார்கள்.

இப்படி நான்கு நண்பர்கள் கான்செப்ட் என்று போய்க்கொண்டிருந்தது பெரிதாக கடைபரப்பாத காலகட்டத்தில், நான்கு நண்பர்கள் கூடவே ஒரு தோழி. தோழி மட்டுமே... என்று கதை பிடித்த இயக்குநர் விக்ரமன், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அதெப்படி... சாத்தியமே இல்லை... சான்ஸே இல்லை... என்றெல்லாம் சொல்லிக்கொண்டே திரும்பத்திரும்ப புதுவசந்தம் பார்த்தார்கள். மிகப்பெரிய ஹிட்டாக்கினார்கள்.

‘என் நண்பனைப் பாத்தீங்களா. என் தளபதி எப்படி நிக்கிறான் பாருங்க... என் சூர்யாவைப் பாருங்க’ என்று மம்முட்டி கேட்க, ரஜினி நிற்க... நட்பின் கற்பைச் சொன்ன தளபதி, மனசுக்கு நெருக்கமான நண்பர்கள் பட்டியலில் இடம்பிடித்தது.

இன்னும் எத்தனையெத்தனை படங்கள்... நட்புக் கதைகள்... நட்பு லிஸ்ட் கொஞ்சம் பெருசுதான்!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close