[X] Close

வீட்டுக்குள் இருந்துகொண்டே போராளிகள் எனச் சொல்லாதீர்கள் : சுரேஷ் காமாட்சி 


suresh-kamatchi-furious-speech-at-porukkis-audio-launch

’பொறுக்கிஸ்’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசிய போது....

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 04 Aug, 2018 14:00 pm
  • அ+ அ-

வீட்டுக்குள் இருந்துகொண்டே போராளிகள் என்று சொல்லக்கூடாது என்று ‘பொறுக்கிஸ்’ இசை வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமாட்சி  பேசினார்.

கே.என்.ஆர் மூவிஸ் சார்பில் தயாராகியுள்ள படம் 'பொறுக்கிஸ்’. தலைப்புக்குக் கீழே ’அல்ல நாங்கள்' என்ற  சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’  படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த மஞ்சுநாத், இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.

தயாரிப்பாளர் ராஜா நாயகனாக நடிக்க, லவனிகா நாயகியாக நடித்திருக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது:

இன்றைய சூழலில் கார்ப்பரேட் ஆதிக்கத்தினால், விளைநிலங்களில் வீடுகளைக் கட்டிவிட்டு உணவுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். அப்படி ஒரு டிஜிட்டல் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இந்தக் காலத்தில் விவசாயத்தின் பெருமைகளை மிகத் தைரியமாகக் கூற ஒரு இயக்குநர் வந்திருக்கிறார் என்கிறபோது மிகவும் பெருமையாக இருக்கிறது. 

சினிமாக்காரர்களிடம் சமூகப் பொறுப்பு இல்லை என்று சமீபகாலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாக்காரர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை  நிருபிக்க வந்த இயக்குநருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 

இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்வதினால் எங்களைச் சமூகவிரோதிகள் , பொறுக்கிகள் என்று சொன்னாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்லத் தைரியம் வேண்டும். இதற்கு ராதாரவியை தேர்ந்தெடுத்தது மிகவும் சரியான ஒன்று. 

படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போதே நிறைய அரசியல் இருப்பது தெரிகிறது. ராதாரவி சார் சும்மாவே ஆடுவார்.. அவருக்குச் சலங்கையும் கட்டி  ஆடவிட்டால் கேட்கணுமா..? நாம் வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு போராளிகள் எனச் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. இந்த மாதிரிக் கருத்துகளைத் தைரியமாகத் தெரிவிக்க நிறையச் சினிமாக்காரர்கள் முன்வரவேண்டும்.

இன்று தமிழ் சினிமாவில் பத்துச் சதவீதம் தான் பெரிய படங்கள் வருகின்றன. மீதி 90 சதவீதம் சிறிய படங்கள்தான் வருகின்றன. ஆகவே,  இந்தச் சின்னப் படங்களை வைத்துத்தான் இன்று சினிமாத் துறையே இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close