மனோபாலா மறைவையொட்டி அவரை நினைவுகூறும் சமூக ஊடக பதிவுகளில், சிவகார்த்திகேயனின் சிலாகிப்பு ஒன்று வைரலாகி வருகிறது.
ரஜினி காந்த் உட்பட உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கி புகழடைந்தவர் இயக்குநர் மனோபாலா. பின்னாளில் இயக்கத்திலிருந்து நடிப்புக்கு தாவியபோது, தனது தனித்துவ குரல் மற்றும் அதற்கான பிரத்யேக மாடுலேஷன், அவற்றுக்கு ஒத்திசையும் ஒல்லி உடம்பு என, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் பரிமளிக்க ஆரம்பித்தார்.
அப்படியான நடிக்கும் வாய்ப்பிலும், எத்தனை சிறிய வேடம் அல்லது சொற்ப எண்ணிக்கையிலான காட்சிகள் என்ற போதும் மனோபாலா பின்வாங்கியதில்லை. ஓரிரு காட்சிகள் என்றபோதும், பெரிய இயக்குநராக வலம் வந்த ஒளிவட்டத்தை ஓரமாக வைத்துவிட்டு, காட்சிக்குத் தேவையானதை தந்துவிடும் இயல்புக்கு சொந்தக்காரர் மனோபாலா. இந்த சிறப்பியல்பை நடிகர் சிவகார்த்திகேயன், திரை விழா ஒன்றில் நினைவு கூர்ந்திருந்தார்.
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படத்துக்கான விழா அது. மனோபாலா உள்ளிட்டோர் உடனிருக்க சிவகார்த்திகேயன் பேசுகிறார். “மனோபாலா மிகவும் ஸ்போர்டிவ் ஆனவர். எந்தளவுக்கு என்றால், தனக்கு நான்கைந்து காட்சிகள் வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார். ஓரிரு காட்சி என்றாலும் அதில் உற்சாகமாக பங்கேற்பார்” என்பதை சிவகார்த்திகேயன் சுவாரசியமாக விவரித்திருப்பார்.
அந்த வீடியோவில், மனோபாலாவின் பிரத்யேக குரலிலும் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்ய, அவருக்கு மனோபாலாவிடமிருந்து செல்ல அடியும் கிடைக்கிறது. இந்த சுவாரசிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மனோபாலாவை சிவகார்த்திகேயன் சிலாகிக்கும் மற்றுமொரு வீடியோவில், இதே போன்று மனோபாலாவை இமிடேட் செய்திருக்கிறார். இந்த வீடியோக்களை பகிர்வோர் எத்தனை எளிமையான மனிதர் மனோபாலா என்று உருக்கமுடன் பதிவிட்டு வருகின்றனர்.