[X] Close

அப்ப சென்றாயன்; இப்ப டேனியலா?


senrayan-daniel

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Aug, 2018 11:46 am
  • அ+ அ-

சர்வ அதிகாரமும் படைத்த ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரம், நாளுக்கு நாள், நேரத்துக்கு நேரம், நிமிஷத்துக்கு நிமிஷம்... எகிறிக்கொண்டே போகிறது. பார்ப்பவர்கள் முகம் சுளிக்க, அங்கே இருப்பவர்கள் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று முன் தினம், பொன்னம்பலத்தை அழைத்து, அவருக்கு செக் வைத்தார். அதாவது, ‘என்னைப் பத்தி, யாஷிகா பத்தி, மும்தஜ் பத்தி என்ன பேசினீங்க? அதையெல்லாம் சொல்லுங்க; எல்லாருக்கு முன்னாடியும் சொல்லுங்க’ என்றார்.

அதாவது, ‘இந்த மும்தாஜ்கிட்ட இந்த சர்வாதிகார டாஸ்க் கொடுத்திருந்தா, இன்னும் பேஜாராகியிருக்கும்’ என்று பொன்னம்பலமும் பாலாஜியும் குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போது, பொன்னம்பலத்துக்கு செக் வைத்து, பேசும்படி கிடுக்கிப்பிடி போட்டார்.

இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, திடீரென ஆவேசமானார் மஹத். ‘இனிமே பாரு... நான் யாருன்னு காட்றேன். என் வேலையைக் காட்டபோறேன்’ என்று சூளுரைத்தார்.

இதில் பாவம் பாலாஜி.. மனிதரின் கோபமும் வீரமும் ஆவேசமும் துள்ளலும் எங்கே போச்சு என்றே தெரியவில்லை. மனிதர் பொட்டிப்பாம்பென உர்ரென்றே இருந்தார். திடீரென்று அந்தப் பக்கம் போவார். அப்புறம் விறுவிறுவென இந்தப் பக்கம் வருவார். பிறகு சுருண்டு படுத்துக்கொள்வார்.

எங்கே செல்லும் இந்தப் பாதை எனும் ரீதியாக, அதிகாரமும் ஆணவமும் பிக்பாஸ் வீட்டில் தலைவிரித்தாடியது.

மகாராணிக்கு போரடித்ததோ என்னவோ... ரித்விகாவை கூப்பிட்டார். ‘ம்... ஆடு’ என்றார். ரித்விகாவும் ஆடினார். பொழுதுபோக்காமாம்!

அங்கே பாலாஜி ஒருபக்கம், பொன்னம்பலம் இன்னொரு பக்கம். ரித்விகா பாடு பரிதாபம். இப்போது சென்றாயனை அழைத்தார் மகாராணி ஐஸ்வர்யா. ‘உங்களுக்குப் பிடிக்காதவங்களையெல்லாம் இங்கிலீஷ்ல திட்டுங்க’ என்றார். செத்தாண்டா சேகரு.

ஆனால் சென்றாயன் விவரப்புலிதான். ஐஸ்வர்யாவைப் பார்த்தார். கடகடவென திட்டத் தொடங்கினார். எப்பூடி? கொதித்துப்போனார் ஐஸ்வர்யா. ‘என்னையவே திட்றியா? ராணியவே திட்றியா? இறங்கு. நீச்சல்குளத்துல இறங்கு. சுத்தம் செய்’ என்று ஆர்டர் போட்டார்.

அடுத்த குறி... மும்தாஜ் போல. அய்யோபாவம். ‘தூக்கி உள்ளே போடு’ என்று மும்தாஜை சிறையில் போட்டார். ஒருத்தரையும் விடவில்லை ஐஸ்வர்யா.

உலகத்துலயே இப்படிலாம் சர்வாதிகாரம் நடக்காதுடா சாமீ... என்று உள்ளே இருது உதைபட்டுக்கொண்டிருப்பவர்கள், குலசாமியை வேண்டிக்கொண்டிருப்பார்கள்.

மறுநாள் விடிந்தாலும். அங்கே இருப்பவர்களுக்கு விடியவே இல்லை. மகாராணி போற்றிப்பாடல், சிரிப்புப் பயிற்சி என்றேல்லாம் ஓடிக்கொண்டிருக்க, தூங்கிக்கொண்டிருந்த பாலாஜி மீதும் சென்றாயன் மீதும் தண்ணீர் ஊற்றக் கிளம்பிய, ஐஸ்வர்யாவுக்கு என்னமோ ஆச்சு போல!

இத்தோடு முடிந்ததா? காலை எழுந்ததும் ஒரு டீ குடித்தால்தானே சுறுசுறுப்பு. அப்படி டீ குடித்துக்கொண்டிருந்த சென்றாயனிடம், கோப்பையைப் பிடுங்கி, டீயை கீழே கொட்டினார் ஐஸ்வர்யா. இதயம் பலஹீனமாக உள்ளவர்கள் பார்க்கக்கூடாது என்று அறிவிப்பு போடவில்லையா பிக்பாஸ்?

அப்போது சென்றாயனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் செம வாக்குவாதம். நொய்நொய்யென்று டார்ச்சர் கொடுத்தார். என்ன பண்ணுவே, என்ன பண்ணுவே, என்ன பண்ணுவே... என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ’வாயை மூடுங்க, வாயை மூடுங்க வாயை மூடுங்க...’ என்று தேய்ந்து போன ரிக்கார்டு மாதிரி கத்திக்கொண்டே இருந்தார். கடுப்பாகிப் போன சென்றாயன், கை ஓங்கிவிட்டார்.

பிறகு சென்றாயனுக்கு தண்டனை என்றதும் கைப்புள்ள டேனியலையும் ஜனனியையும் வைத்துக்கொண்டு, சென்றாயன் தலையில் முட்டையையும் குப்பையையும் கொட்டச் சொன்னதும், என் தலைமுடிதாம்பா என் சம்பாத்தியம். அதை சரிபண்ணிக்க நான் பணக்காரன் இல்ல... என்று கண்ணீர்விடாத குறையாகப் புலம்பியதும் பிக்பாஸ் உலகத்தின் சோகச் சித்திரம்.

அடுத்த நாளில் டேனியல் மீது எகிறியதும் எல்லோரையும் தூக்கி உள்ளேப் போட்டதும் தனி எபிஸோடு! முத்தாய்ப்பாக, பொன்னம்பலம் ஐஸ்வர்யாவை அப்படியே அலேக்காகத் தூக்கி, நீச்சல்குளத்தில் போட்டதுதான் சர்வாதிகார ஆட்சிக்குக் கிடைத்த சவுக்கடி.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close