[X] Close

த்ரிஷ்யம் ‘த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’ தழுவல்?


3-years-of-drishyam

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Jul, 2018 11:47 am
  • அ+ அ-

த்ரிஷ்யம், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் மலையாளத்தில் வெற்றி பெற்று தமிழில் கமல்ஹாசன் கவுதமி நடிப்பில் பாபநாசம் என வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து பின்னர் இந்தியில் த்ரிஷ்யம் என்ற பெயரிலேயே வெளியாகி அஜய் தேவ்கானுக்கு பெயர் பெற்றுக் கொடுத்தது.

த்ரில்லர் ஜானர் படமான த்ரிஷ்யம் மொழிகள் கடந்து ரசிகர்களைப் பெறக் காரணம் கதைக் களம். அந்தக் கதைக்களத்தால்தான் இன்று இப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் ட்விட்டரில் இப்படம் குறித்து  3Years Of Drishyam ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இதே தருணத்தில் ‘த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’ கதையையும் நாம் கொண்டாடியே ஆக வேண்டும். காரணம் இக்கதையின் தழுவல்தான் த்ரிஷ்யம் என்று கூறப்படுகிறது. இயக்குநர் ஜீத்து ஜோசப்போ இதனை இன்னமும்கூட திட்டவட்டமாக மறுத்துவருகிறார். இருந்தாலும் த்ரிஷ்யம் ‘த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’ தழுவல் என்பதை நிரூபிக்க பல காட்சிகள் சாட்சியாக இருக்கின்றன.

கெய்கோ ஹிகாஷினோ என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய கதைதான் இது. இந்த நாவலின் அடிப்படையில் ‘சஸ்பெக்ட் எக்ஸ்’ என்னும் திரைப்படமும் வெளியாகி அங்கு பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது.

இனி கதைச் சுருக்கம்..

சரி அப்படத்தின் கதையைச் சொன்னால் உங்களால் த்ரிஷ்யத்துடன் ஒப்பிடமுடிகிறதா என்று பாருங்கள்.
டெட்சுயா இஷிகாமி, யசுகோ ஹனோகா இருவரும்தான் கதையின் முக்கிய மாந்தர்கள். யசுகோ விவாகரத்து பெற்றவர். ஒரு உணவகத்தில் வேலை பார்க்கிறார். அவரது மகள் மிசாட்டோவுடன் வசித்து வருகிறார். அண்டை வீட்டில் இருப்பவர் இஷிகாமி. இவர் கணக்கு வாத்தியார். இவருக்கு யசுகோ மீது காதல் இருக்கிறது. ஆனால் அவர் அதை வெளிப்படுத்தவே இல்லை.

இந்நிலையில் ஒரு நாள் யசுகோவின் முன்னாள் கணவர் டொகாஷி, யசுகோவின் வீட்டுக்கு வருகிறார். அங்கு சண்டை ஏற்பட அது கொலையில் முடிகிறது. இதை அறிந்துகொண்ட இஷிகாமி யசுகோவுக்கு உதவ முன்வருகிறர். அவர் சடலத்தை மறைக்கிறார். பின்னர் கொலையை எப்படி படிப்படியாக மறைக்கிறார் என்பதுதான் கதை.

இந்த கொலை வழக்கை ஒரு டிடக்டிவ் விசாரிக்கிறார். அவர் பெயர் குசாநகி. அவருக்கு யசுகோ மீது சந்தேகம் எழுகிறது. யசுகோ சொல்வது ஏதோ ஒரு கட்டுக்கதை என நினைக்கிறார் குசாநகி. ஆனால் அதை நிரூபிக்க முடியாமல் திணறுகிறார்.

அப்போதுதான் குசாநகி மனாபு யுகாவா என்ற மருத்துவரின் உதவியை நாடுகிறார். யுகாவாவும் இஷிகாமியும் கல்லூரி தோழர்கள். இஷிகாமியின் அறிவாற்றல் குறித்து யுகாவாவுக்கு நன்கு பரிச்சியம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இஷிகாமியை சந்திக்கும் யுகாவா இந்தக் கொலையில் இஷிகாமிக்கு ஏதோ தொடர்பு இருக்கிறது என நம்புகிறார்.

கொலையை நிரூபிக்க யுகாவா மேற்கொள்ளும் அறிவுபூர்வமான நகர்வுகளும் அதை உடைத்தெரிய இஷிகாமி தனது அறிவுத்திறனை பயன்படுத்தும் விதமும் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் யுகாவா இஷிகாமியின் திட்டத்தைத் தெரிந்து கொள்கிறார். இஷிகாமி இத்தனையையும் யசுகோ மீதான காதலில் செய்கிறார் என்பதை அறிந்து வியப்புக்குள்ளாகிறார்.

இப்போது சொல்லுங்கள் இந்தக் கதை த்ரிஷ்யத்தை நினைவுபடுத்துகிறதா இல்லையா என்று?!

கதை தழுவல் என்று ஜித்து ஒப்புக் கொள்ளாவிட்டாலும்கூட த்ரிஷ்யம் படத்தில் சிற்சில மாறுதல்கள் செய்து அதை சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்ததற்கு நிச்சயமாக சபாஷ் சொல்லியே தீர வேண்டும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close